கபடியில் வெளுத்து வாங்கும் பிரியா!

Priya-jpg-1194

 

பிரியாவின் வலது புருவத்தையொட்டி காயத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படாமல் உள்ளது. அந்தக் காயத்துடன் தான் சமீபத்தில் தென்மண்டல கபடி போட்டியில் அரையிறுதி வரை போய் வந்திருக்கிறார்.

ஆனால், “பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் இது… விளையாட்டுன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்” என்கிறார் அலட்டிக்கொள்ளாமல்.

கபடிக் களத்தில் கதிகலக்கும் பிரியா, பேச்சில் மிகவும் மென்மை காட்டுகிறார்.

அடுத்து இந்திய கடற்கரை கபடி அணிக்கான முகாமுக்குத் தயாராகும் முனைப்பில் இருந்த பிரியாவுடனான பேட்டியில் இருந்து…

எப்போது முதல் தீவிரமாக கபடி ஆடத் தொடங்கினீர்கள்? 

பள்ளி நாட்களிலேயே கபடி ஆர்வம் இருந்தது என்றபோதும், தீவிரமாக ஆடத் தொடங்கியது, சென்னை ராணி மேரிக் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான். பி.எஸ்சி. உடற்கல்வியியலுடன் கபடியிலும் மும்முரமாக இருந்தேன். மாநில அளவிலும், கிளப் அளவிலும் சிறப்பாக விளையாடியதன் மூலம் தமிழக அணிக்குத் தேர்வானேன்.

நீங்கள் முதல்முறையாக விளையாடிய தேசியப் போட்டி?

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது, தமிழக அணி சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய கடற்கரை கபடி போட்டியில் ஆடினேன். அப்போட்டியில் பதக்கம் வெல்லவில்லை என்ற போதும் நல்ல அனுபவமாக அமைந்தது.

சில நாட்களுக்கு முன் ஆடிவந்திருக்கும் தென்மண்டலப் போட்டி பற்றிக் கூறுங்கள்…

ஐதராபாத்தில் நடைபெற்ற அப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினோம். அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணியுடன் மோதினோம். வலுவான அந்த அணியுடன் சரிக்குச் சமமாக ஆடினோம். இரு அணியினரும் விட்டுக் கொடுக்காமல் விளையாடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் 26- 23 என்ற புள்ளிக் கணக்கில் கர்நாடகம் வெல்ல, நாங்கள் மூன்றாவது இடம் பெற்றோம்.

நீங்கள் மொத்தம் எத்தனை தேசியப் போட்டிகளில் ஆடியிருக்கிறீர்கள்? 2011-ல் நீங்கள் ஆடிய தேசியப் போட்டிகள்?

இதுவரை 5 தேசியப் போட்டிகளில் ஆடிவிட்டேன். 2011-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் நடைபெற்ற தேசிய சீனியர் கபடி போட்டியில் தமிழக அணி சார்பில் ஆடினேன். இப்போட்டியில் நாங்கள் இரண்டாவது இடம் பெற்றோம். கடந்த ஆண்டிலேயே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய கடற்கரை கபடி போட்டி இறுதியாட்டத்தில் அரியானாவிடம் போராடித் தோற்று இரண்டாவது இடம் பெற்றோம்.

உங்களின் ஸ்பெஷாலிட்டி என்ன?

நான் ரைடர். ‘கிக்’ எனது பலம். போனஸ் லைனை தொடுவது எனது ஸ்பெஷாலிட்டி.

கொஞ்சம் முரட்டுத்தனமான கபடியை, பெண்களுக்கு ஏற்ற விளையாட்டு என்று சொல்ல முடியுமா?

கபடிக்கான உத்திகளை அறிந்து முறைப்படி விளையாடினால் இது பெண்களுக்கும் ஏற்ற விளையாட்டுதான். செலவே வைக்காத விளையாட்டு இது. சிறு காலியிடம் போதும். கபடி விளையாடும் பெண்கள் உடல் உரத்தோடு, மனதிலும் திடமாக இருப்பார்கள்.

நீங்கள் சாதாரண கபடி, கடற்கரை கபடி இரண்டும் ஆடுகிறீர்கள். இரண்டில் உங்களுக்குப் பிடித்தது?

இரண்டுமே எனக்குப் பிடித்ததுதான். இரண்டையும் ரசித்துத்தான் ஆடுகிறேன்.

சரி, இரண்டில் கடினமானது?

நிச்சயமாக பீச் கபடிதான். கடற்கரை மணலில் ஆடுவதால் அதிக சக்தி தேவைப்படும். அணிக்கு தலா 4 பேர்தான் என்பதால் பொறுப்பு அதிகம், விறு விறுப்பாகவும் இருக்கும்.

தற்போது பரவலாக செயற்கைத் தளங்களில் கபடி ஆடப்படுகிறது? இது சாதகமா? பாதகமா?

சாதகம், பாதகம் என்று பொத்தாம்பொதுவாகக் கூற முடியாது. இரண்டிலுமே சில அனுகூலங்கள் இருக்கின்றன. சில சறுக்கல்களும் இருக்கின்றன. உதாரணமாக, மண் களத்தில் நல்ல பிடிமானம் கிடைக்கும். செயற்கைத் தளத்தில் நல்ல வேகம் கிடைக்கும். அதையதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னும் எவ்வளவு காலம் கபடி விளையாடுவீர்கள்? ஆடுவதை நிறுத்தியபிறகும் கபடியுடனான உங்களின் உறவு தொடருமா? 

இன்னும் ஓர் ஐந்தாண்டு காலமாவது கபடி ஆட முடியும் என்று எண்ணுகிறேன். அதன்பிறகும் பயிற்சியாளராக இவ்விளையாட்டு உடனான தொடர்பை நீட்டித்துக்கொள்ள நினைக்கிறேன். இப்போதே கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மகளிர் கபடி அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த கபடி வீராங்கனைகள்?

இந்திய ரெயில்வே அணியில் ஆடும் கர்நாடக வீராங்கனை மம்தா, மற்றொரு கர்நாடக வீராங்கனை தேஜஸ்வினி ஆகியோரின் ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆட்டத்தில் மட்டுமல்ல, பழகுவதற்கும் இவர்கள் இனியவர்கள்.

நீங்கள் உடல்தகுதியை எவ்வாறு காத்துக்கொள்கிறீர்கள்?

கபடி சீனியர் வீராங்கனைகள் 70 கிலோ எடையைத் தாண்டக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் உடல் தகுதியை கச்சிதமாக வைத்துக்கொண்டிருக்கிறேன்.

சிறந்த வீராங்கனை விருது பெற்றிருக்கிறீர்களா?

பலமுறை பெற்றிருக்கிறேன். குறிப்பாக, கடந்த 2009-ம் ஆண்டு எங்கள் கல்லூரியில் சிறந்த விளையாட்டு வீராங்கனை, சிறந்த கபடி வீராங்கனைக்கான விருது பெற்றேன். கல்பாக்கத்தில் நடைபெற்ற மாந’ல பீச் கபடி போட்டியில் ‘பெஸ்ட் பிளேயர்’ ஆகத் தேர்வானேன். 2010-ல் திருநெல்வேலியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் ‘சிறந்த வீராங்கனை’ விருது பெற்றேன். இப்படிப் பல விருதுகள்.

கபடியில் உங்களின் இலக்கு என்ன?

எல்லோரையும் போல இந்திய அணிக்கு ஆடுவதுதான். ஏற்கனவே மூன்று முறை இந்திய அணிக்கான தேர்வு முகாமில் பங்கேற்ற போதும் அணியில் ஆடும் வாய்ப்புப் பெறவில்லை. இதோ இப்போது இந்திய கடற்கரை கபடி அணிக்கான தேர்வு முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இந்திய அணிக்குத் தேர்வாகும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

‘கபடியெல்லாம் நமக்கு ஒத்து வராது… விட்டுவிடு’ என்று வீட்டில் சொல்லியிருக்கிறார்களா?

‘பெண்பிள்ளைக்கு கபடி தேவையா?’ என்று தெரிந்தவர்கள், அறிந்தவர்கள்தான் எங்கள் வீட்டில் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ரெயில்வே துறையில் பணிபுரியும் அப்பா சீனிவாசன், அம்மா கோமளா, அக்காக்கள் பத்மாவதி, சுரேகா, குத்துச்சண்டை வீரனான தம்பி பிரபு ஆகியோர் எனக்கு உறுதுணையாகவே உள்ளார்கள். அவர்களை அடுத்து, தேவையான உதவிகளை அளித்து ஊக்குவித்துவரும் தமிழக கபடிக் கழகப் பொதுச் செயலாளர் சபியுல்லா, சென்னை மாவட்ட கபடிக் கழகச் செயலாளரும், எங்கள் அணி பயிற்சியாளருமான கோல்டு ராஜேந்திரன் ஆகியோருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

பிரியாவுடனான பேச்சில், கபடி மீது அவர் கொண்டிருக்கும் பிரியம் புரிந்தது. வாழ்த்தி விடைபெற்றோம்

மூலப்படிவம்

378 total views, 1 views today

Share Button