புத்தரின் பூமி தாய்லாந்து பயணத் தொடர்.

download

சாவ் ப்ராயா, தாய்லாந்தின் மத்திய நிலத்தில் பாய்ந்தோடும் ஒரு நதி. வடக்கே நக்கோன் ஸ்வான் வட்டாரத்தில் பிங், நான் ஆகிய இரண்டு நதிகளின் சங்கமத்தில் உருவாகும் நதி இது.  சாவ் ப்ரயா நதிக்கு இன்னொரு பெயரும் தாய் மொழியில் உண்டு.  மீ நாம் என்பது இந்த மற்றொரு பெயர்.  மி என்பது அன்னை என்ற பொருளிலும் நாம் என்பது நதி என்ற பொருளிலும் அடையாளம் காணப்படுவது. இணைத்து வாசிக்க அன்னை நதி என பொருள் பெறுகின்றது. தாய்லாந்தின் வடக்கு தொடங்கி பாங்காக் நகரைக் கடந்து 372கிமீ தூரம் பயணித்து தாய் குடாவில் கலக்கின்றது சாவ் ப்ராயா நதி.சாவ் ப்ரயா நதி  பல நூற்றாண்டுகளாக தாய்லாந்து நாட்டின் பசுமைக்குக் காரணமாக இருப்பது. விவசாயமே தாய்லாந்தின் மிக முக்கிய தொழில் என்பது நாம் அறிந்ததே. ஆக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விவசாயம் செழிக்க உதவும் வற்றாத நீரை வழங்கும் இச்சவ் ப்ராயா பகுதியில் அதிகமாக மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதும் அதன் பொருட்டு சாம்ராஜ்ஜியங்களும் அரசாட்சிகளும் இவ்விடங்களை மையமாகக் கொண்டு அமைந்தன என்பதனையும் காண முடிகின்றது. இப்படி சாவ் ப்ராயா நதிக்கருகில் இருக்கும் ஒரு நகரம் தான் அயோத்தையா!14ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் தூற்றாண்டு வரை கிழக்காசியப் பகுதியில் தனிச்சிறப்பும் புகழும் பெற்று விளங்கிய நகரமாக அயோத்தையா விளங்கியது. பல ராஜ்ஜியங்களை உள்ளடக்கிய பேரரசுக்குத் தலைநகரமாக இக்காலகட்டத்தில் அயோத்தையா விளங்கியது- இந்நகரத்தில், அதிலும் குறிப்பாக சாவ் ப்ராயா நதிக்கருகே பல ப்ரமாண்டமான கோயில்களும் கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. 1350ம் வருஷம் ராமாதிபோதி எனும் மன்னரால் (1351 – 1369)  அயோத்தையாவின் தலைநகரம் உருவாக்கப்பட்டது.அயோத்தையாவுக்கு அருகில் இருக்கும் நகர் லோப் பூரி. இந்த நகரில் அக்காலகட்டத்தில் மிக விரிவாக அம்மை நோய் பரவியது. நோய்க்கு மருந்து கிடைக்காது பலர் இப்பகுதியை விட்டு வெளியேறினர்.  அப்பகுதியின் மன்னர் யூ தோங், லோப் பூரி நகரில் விரிவாகப் பரவிய அம்மை நோயிலிருந்து தன்னையும் தன்னை சார்ந்திருந்த மக்களையும் காக்கும் பொருட்டு அங்கிருந்து வெளியேறி புதிய ஓரிடத்திற்கு வந்தடைந்தார். இங்கு தனது பெயரை ராமாதிபோதி என அமைத்துக் கொண்டு தான் வந்தடைந்த நகரான அயோத்தையாவில் தனது ராஜ்ஜியத்தை அமைத்து தலைநகரை உருவாக்கி  அப்பகுதியை ஆட்சி செய்ய ஆரம்பித்தார் என்பது வரலாறு.

மன்னர் யூதோங் பற்றி மற்றுமொரு கதையும் உண்டு. இவர் சீனதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட ஒரு வர்த்தகர் என்றும் தற்போதைய பாங்காக் நகர் இருக்கும் பெட்சாபூரி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும் வர்த்தக நோக்கில் அயோத்தையா நகர் இருக்கும் பகுதிக்கு வந்து பின்னர் மன்னரானவ்ர் என்றும் கூறப்படுகின்றது.​

15ம் நூற்றாண்டு வாக்கில் அயோத்தையா தனது ஆட்சி நிலப்பரப்பையும் ஆளுமையையும் விரிவாக்கி இப்பிராந்தியத்தில் மிகப் பிரபலமான ஒரு இடமாக உருவாகியது. அக்காலத்தில் மற்றொரு புகழ்வாய்ந்த நகரமும் மிகப் பெரிய ராஜ்ஜியமுமாக விளங்கிய  சுக்கோத்தை பேரரசியும் 15ம் நூற்றாண்டின் மத்தியில் அயோத்தையாவின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தது. உள்ளூரிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் வர்த்தகத்தை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் பலனாக ஐரோப்பிய வர்த்தகர்களின் வருகை அயோத்தையாவிலும் ஏற்பட்டது. இது அயோத்தையாவின் செல்வச் செழிப்பை மென்மேலும் அதிகரித்த வண்ணம் புகழ் பெறச் செய்தது.

தாய்லாந்திற்கு முன்னர் சியாம் அல்லது சயாம் என்ற பெயர் இருந்தது என்பதை நம்மில் பலர் அறிவோம். இப்பெயர் குறிப்பிடப்படும் நிலப்பகுதி அயோத்தையா தான்.

1767ல் நடைபெற்ற போரில் அயோத்தையா மிக மோசமாக பர்மிய படையினரால் சேதப்படுத்தப்பட்டது. அரச மாளிகைகள் தகர்க்கப்பட்டன. இதன் பொருட்டு தலைநகர் அயோத்தையாவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு தற்போதைய பாங்காக் நகருக்கு பெயர்ந்தது. அது முதல் பாங்காக் நகரமே தாய்லாந்தின் பரந்த நிலப்பரப்பின் தலைநகரமாக விளங்கி வருகின்றது.

அயோத்தையாவின் பெயர் நமக்கு அயோத்தியை ஞாபகப் படுத்தலாம்.

இந்திய நிலப்பரப்பில் ராம ராஜ்ஜியம் விளங்கிய நகரான அயோத்தியின் பெயர் அடிப்படையில் அமைந்தது தான் தாய்லாந்தின் அயோத்தையா நகரம்.  ராமாயணக் காப்பியம் தாய்லாந்தில் ராமாக்கியன் என்ற பெயரில் சற்றே மாறுபட்ட கதையம்சங்களுடன் மக்கள் வாழ்வில் ஏற்றக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாகத் திகழ்கின்றது. தாய்லாந்தின் மன்னர்கள் பெயர்களைப் பார்க்கும் போது, பல நூற்றாண்டுகளாக ராமா என்ற பெயர் மன்னர்களின் பெயருடன் இணைந்திருப்பதை நன்கு காண முடியும்.

தாய்லாந்து அரச பரம்பரையில் மன்னராக முடிசூடும் நாளில் அம்மன்னன் தன்னை ராமராக நினைத்து தான் அமைக்கும் ராஜ்ஜியம் ராமராஜ்ஜியமாக இருக்கும் என உறுதி மொழி கூறி ஆட்சிப்பொறுப்பை எற்கின்றார். இங்கு தெய்வமும் அரசரும் இரு வேறு பொருளாக இருந்தாலும் இரண்டும் இணைந்த முக்கியத்துடன் திகழ்வதாக உருவாக்கம் செய்யப்பட்டு ராம அவதாரமே மன்னர் என்ற நிலையில் மக்கள் மன்னரை மரியாதை செலுத்தும் பண்பு அமைந்திருக்கின்றது. மன்னரின் சமயமாக ஹிந்து மதத்தின் பல அம்சங்கள் கலந்த வடிவிலான புத்த மதமே திகிழ்கின்றது.

இன்றும் கூட பாங்காக் நகரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர் பூமிபோல் 8ம் ராமா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் மிக ஆழமான அன்புடன் இவர் விளங்குகின்றார். இவர் மக்கள் நலனுக்காக பல முயற்சிகளைச் செய்தவர். இவரும் இவரது துணைவியாரும், மகளும் உள்ளூர் மக்களால் மிக விரும்பப்படுபவர்கள். சேவை மன்ப்பான்மை மிக மிக அதிகமாக உடையவர்கள். இதில் விதி விலக்காக மன்னரின் மகன் கருதப்படுகின்றார். ஆயினும் பொதுமக்கள், மன்னர், பேரரசியார், இளவரசியார் பெயரில் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் அளவற்றது என்பதை நேரில் நான் அங்கிருந்த பொழுதில் உணர்ந்தேன். குறிப்பாக வடக்கு தாய்லாந்தில் மலைப்பகுதியில் ஒரு பயணத்தின் போது அங்கு ஒரு முறை வந்திருந்த அரசியாரை தெய்வமாக மக்கள் வணங்கி அவரை வரவேற்று  உபசரித்து மக்கள் மகிழ்வித்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டு ஆச்சரியம் கொண்டேன்.​

எங்கள் அயோத்தையா பயணத்தில் முதலில் வாட் யாய் சாய் மொங்கோன் சென்றடைந்தோம். அப்போது காலை மணி ஏறக்குறை 10.40 ஆகியிருந்தது. இந்த வாட் யாய் சாய் மொங்கோன் என்ப் பெயர்க் கொண்ட புத்த விகாரை பல வெவ்வேறு பகுதிகளாக அமைந்தவை. ஒவ்வொன்றாகக் காண சற்றே நேரம் எடுக்கும் என்பதால் 10 நிமிடங்கள் எங்களுக்கு விளக்கமளித்து விட்டு 30 நிமிடங்கள் ஆலயத்தை முழுதாகச் சுற்றிப் பார்த்து வர அனுமதி அளித்தார் எங்கள் பயன வழிகாட்டி. ஆல்யத்தின் அழகில் நான் என்னை மறந்தேன்!

 அயோத்தையாவுக்குச் செல்வோமா?

டிசம்பர் 14ம் தேதி நாங்கள் ஆர்ட்ரியம் ஹோட்டலுக்கு வந்தவுடனேயே ரிஷப்ஷனில் எங்கள் பெயரைச் சொல்லி எங்கள் பயணக் குழுவைப் பற்றி விசாரித்து மறு நாள் காலை சரியாக 7 மணிக்கு எங்கள் பேருந்து புறப்படும் என்றும் அதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே நாங்கள் காலை உணவை முடித்து தயாராகி வாசலில் காத்திருக்க வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.அறைக்குச் சென்று குளித்து தயாராகி நானும் என் கணவருமாக இரவு உணவு சாப்பிடச் செல்லலாம் என முடிவெடுத்து சாலையில் நடக்க ஆரம்பித்தோம். பெரிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே சுற்றுச்சூழல் மாசு தான், பாங்கோக் நகரின் அதிகப்படியான வாகனங்களினால் அந்த நகரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கின்றது. சாலைப் பகுதிகள் மிகத் தூய்மையாக இருந்த போதிலும் காற்று மிக அசுத்தமாகவே உள்ளது. எங்களுக்கு விருப்பமான சீதோஷ்ணமாக இருந்தாலும் இந்தக் காற்று அசுத்தத்தால் அதிகம் சாலையில் நடக்க இருவருக்குமே மனம் வரவில்லை. விரைவாக ஒரு ரெஸ்டாரண்டைத் தேடி அங்கே உணவை ஆர்டர் செய்தோம். இருவருக்குமே தாய் க்ரீன் கறி (பச்சை குழம்பு) தான் பிடித்திருந்தது. இது தாய் துளசி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு குழம்பு. சாதத்தோடு சாப்பிடப்படுவது.மறு நாள் காலை ஆர்ட்ரியம் ஹோட்டலில் பஃப்பே வகையில் காலை உணவு. காரமான  உணவு வகைகள் கிடைத்தன. என் கணவருக்கும் ஆசிய நாடுகள் வந்து விட்டால் கார உணவு வகைகள் தான் அவரது தேர்வு. உறைக்கின்றது எனச் சொல்லிக் கொண்டே விடாமல் சாப்பிடும் பழக்கம். நானும் என் விருப்பத்திற்கு பிடித்தமான எல்லா வகை உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்த்து முடித்தேன். என்ன ஆச்சரியம் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல வகை உணவுகளில் உப்புமாவும் வடையும் கூட இருந்தன.

ஹோட்டல் வாசலில் பேருந்தில் புறப்படும் முன்

ஏனைய பயணிகளையும் பேருந்தையும் அடையாளம் கண்டு கொள்ள நினைத்து நாங்கள் சற்று முன்னதாகவே எங்கள் எல்லா உடமைகளுடனும் வந்து வெளியே வந்து விட்டோம். எங்கள் பயணத்திற்காக ஒரு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து, அதில் வாகன ஓட்டுனருடன் ‘பஸ் போய்’ என ஆழைக்கப்படும் உதவியாளர் ஒருவரும் எங்கள் பயண வழிகாட்டியும் இருந்தனர். எங்களை அறிமுகம் செய்து கொண்டு, பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா புக்கிங் ஆவணங்களையும் காட்டியவுடன் எங்கள் பெட்டிகளைப் பஸ்ஸில் ஏற்றி எங்களையும் ஏனையோருக்கு அறிமுகப் படுத்தி வைத்தனர்.

எங்களுடன் இப்பயணத்தில் இணைந்து கொண்டோர் மொத்தம் 22 பேர். அனைவரும் ஜெர்மானியர்கள். ஜெர்மனியில் இயங்கும் Berge & Meer  பயண நிறுவணத்தில் எங்களைப் போல பதிந்தவர்கள் இவர்கள். இவர்கள் 22 பேருடனும் தான் எங்களின் அடுத்த 13 நாட்கள் பயணம்.

சிலர் தம்பதியர்.. சிலர் தனி நபர்கள்.. எங்களுடன் இந்த தாய்லாந்தின் இந்த வடக்கு தெற்கு பயணத்தை ரசிக்க வந்த ஜெர்மானியர்கள். அனைவருமே ஏறக்குறைய 40லிருந்து 60வயதுக்குட்பட்டவர்கள்.

எங்களின் பயண வழிகாட்டி 46 வயது பெண்மனி ஒருவர். பார்ப்பதற்கு 30 வயது என்றே சொல்லலாம். அழகான, அன்பான பல வரலாற்று விபரங்களும் தகவல்களும் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும் தாய்லாந்து பெண்மனி.

அன்றைய எங்கள் பயணம் பாங்காக் நகரிலிருந்து நேராக அயோத்தையா சென்று பின்னர் இரவு சுக்கோத்தை நகரை அடைவது. இது 390கிமீ தூரம். இதில் அயோத்தையாவில் சில இடங்களைப் பார்த்து விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சுக்கோத்தை செல்வது என்பதாக அவர் திட்டமிருந்தது.

சம்மொன்கோல் கோயிலில் ஒரு பகுதியில்

அயோத்தையாவில் ஏராளாமான புத்தர் கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மிக்கவை. எல்லா கோயில்களுக்கும் செல்வது என்பது சாத்தியப்படாது என்பதால் வாட் சம்மொன்கொல் மட்டும் செல்வது என்றும் நேரம் அமைந்தால்  மேலும் ஒரு புத்த விகாரையைப் பார்க்கலாம் என்று எங்கள் பயண வழிகாட்டி குறிப்பிட்டார்.

பாங்காக் நகரை விட்டு சரியாக காலை 7 மணிக்கு எந்தத் தாமதமும் இன்றி எங்கள் பஸ் புறப்பட்டது. ஏனைய பெரிய நகரங்களைப் போல உயர்ந்த கட்டிடங்களும் வர்த்தக நிலையங்களும்  பாங்காக்கிலும் காண முடிகின்றது.

பஸ்ஸில் ஏறி அமர்ந்து செல்லும் போது ஏனைய பயணிகளுடன் முதலில் எல்லோருக்குமே பேச ஒரு தயக்கம். முதல் நாள் காலையில் அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் எங்கள் பயண வழிகாட்டியிடமே கேட்பது என ஒரு வித தயக்க உணர்வுடனே காணப்பட்டோம். இந்த நிலை அன்று இரவுக்குள் மாறிப் போனது. புதிய நண்பர்களை அந்த முதல் நாள் பயணத்திலேயே அறிமுகமாக்கிக் கொண்டோம்.

மூலப்படிவம்

239 total views, 1 views today

Share Button