யாத்திரை

pkfgx_186461

கடும் சூடு நிறைந்த பொட்டல் வெளி அது. சுற்றிலும் செம்மண் சரளைக் கற்களும் ஆங்காங்கே முட்கள் நிரம்பிய கருவேலம் மரங்களும், சப்பாத்திக் கள்ளிகளும் மட்டுமே நிரம்பிக் கிடந்தன. அந்த புளிய மரத்தின் கீழ் நான் நின்று கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இரண்டு மண் மேடுகள் சுற்றிலும் செங்கல் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இடது புறம் அப்பத்தாவும் வலதுபுறம் தாத்தாவும் அங்கேதான் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வசித்த வீடு எனக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் அதும் கண்ணெதிரேயே தெரிந்தது. எனக்கு முன்னால் அவர்களின் சமாதியும், பின்னால் வாழ்ந்த வீடும் நடுவில் நானும்…..சுற்றிலும் இருந்த பனைமரங்கள் அனலாய் வீசிய காற்றோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தன. தாத்தா நட்டு வைத்த மரங்கள்தான் அவை அத்தனையும்… வானம் பார்த்த பூமியின் புஞ்செய்க் காடு பார்ப்பதற்கு அவ்வளவு சுகமாய் ஒன்றும் இருக்காது. பயன்படுத்தாத தரிசு நிலங்கள் தோறும் வகை தொகை இல்லாமல் முட்களும், கரம்பைகளும் பெயர் தெரியாத பல செடிகளும் இஷ்டப்படி வளர்ந்து கிடக்கும். எது வருமோ அது வளரும். என் பூர்வீக வீட்டுக்கு பின் இருக்கும் இந்த புஞ்சைக் காட்டில் முன்பு எப்போதோ கடலை, எள், மிளகாய் எல்லாம் பயிரிட்டுக் கொண்டிருந்ததை அடிக்கடி அப்பத்தா சொல்லிக் கொண்டிருந்த 1990களில் நாங்கள் மனதால் கூட நாங்கள் அந்த ஊரில் வசிக்காமல் அப்பாவின் வேலை நிமித்தம் இடம் பெயர்ந்திருந்த ஊரின் வாழ்க்கைக்குள் அகப்பட்டுக் கிடந்தோம். அப்பத்தாவிற்கு மீண்டும் பழைய வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் நிறைய இருந்தது. வீடு விட்டுப் போன எல்லா பிள்ளைகளும் மீண்டும் கிராமத்து வீட்டுக்கு வந்து விடமாட்டார்களா என்று கடைசி வரை எதிர்பார்த்து தோற்றப் போனாள் அவள். தாத்தா சாகும் வரை செய்து கொண்டிருந்த அரைகுறை விவசாயம் தாத்தாவிற்குப் பிறகு பங்குக்கு விடப்பட்டு பங்கு போடுபவர் கொடுக்கும் நெல் ஏனோ தானோ என்று வீடு வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அதுவும் கொஞ்ச காலம்தான்…. தொடர்ச்சியாய் மழை இல்லாமல் போனது. மழை இல்லாமல் போனதால் அங்கிருந்த மனிதர்கள் வெவ்வேறு வேலைகளுக்காய் நகரங்களைத் தேடி ஓடினார்கள். அப்படியாய் ஆட்கள் இடம் பெயர்ந்ததால் அரைகுறை விவசாயம் செய்யவும் ஆட்கள் கிடைக்காமல் போனது. வேலைக்கு ஆட்கள் வந்த காலம் போய் என் நிலத்துக்கு நீ வந்து வேலை பார் உன் நிலத்துக்கு நான் வந்து வேலை பார்க்கிறேன் என்ற நிலை ஏற்பட்டதால், ஆட்களை வைத்து வேலை ஏவி விவசாயம் பார்த்தவர்களுக்கு அந்த சூழல் வசதியில்லாமல் போனது. எல்லா நிலங்களும் பங்குக்கு, பங்குக்கு என்று விடப்பட்டு பங்குக்கு எடுத்தவரால் விவசாயம் செய்ய வேலை ஆட்கள் இல்லாமலும், மழை இல்லாமலும் நிறைய நிலங்கள் கைவிடப்பட்டன. ஐப்பசி கார்த்திகையில் பெய்யும் மழையில் கண்மாய் கொஞ்சமாவது நிறையும். நிறைந்த கண்மாயில் பாதியை நிலம் உறிஞ்சிக் குடித்து விடும், மீதியை சித்திரை வைகாசிக்கு முன்பே சூரியனின் உஷ்ணம் எடுத்துக் கொண்டுவிடும் விளைவு பாலம் பாலமாய் வெடித்த தரையோடு கண்மாய் சூம்பிப் போய் கிடக்கும்…. அது எல்லாம் ஒரு காலம். வானம் பார்த்த பூமி இது என்று கொஞ்சமாவது கரிசனத்தோடு மழை பெய்த காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது இப்போது. ஆற்று பாசனம் என்ற பெயரில் எப்போதாவது வந்து தொண்டை நனைத்து விட்டுப் போகும் வைகைக்கு என்ன ஆயிற்று என்று எப்படி அந்த குக்கிராமத்து மனிதர்களுக்குத் தெரியும்…? என் பூர்வீக வீட்டில் யாரும் இல்லை இப்போது. அது பூட்டிக் கிடக்கிறது. வீட்டிற்குள் கொஞ்ச நேரம் சுற்றி வரலாம் என்று வீடு நோக்கித் திரும்பினேன். என் சட்டையைப் பிடித்து இழுத்த கருவேலம் முள் ஒன்று ஏனோ அப்பத்தா என் முகவாய்க் கட்டையையை பிடித்து முன்பொரு நாள் திருப்பியதை ஞாபகப்படுத்தியது.வெள்ளைப் பருத்தி வேட்டியும், தலை வழியே மாட்டும் வெள்ளை முழுக்கை சட்டையுமாய் நெற்றி நிறைய விபூதியோடு தாத்தாவின் வாசம் எனக்கு புத்திக்குள் பரவியது. தாத்தாவிற்கு ஏறு நெற்றி. அப்பாவுக்கும் அப்படித்தான், எனக்கும் அப்படித்தான். நெற்றி அகலமாய் இருக்கணும்பா அப்பத்தான் கை நிறைய துண்ணூறு எடுத்து பூசிக்க் முடியும் என்று அம்மா அடிக்கடி என்னிடம் சொல்லும். ஏறு நெற்றி விபூதி பூச வசதியானது. எனக்கு எட்டு வயதானபோது தாத்தா இறந்து போய்விட்டார் என்றாலும்… எனக்கு அவரை நன்றாய் நினைவில் இருக்கிறது இப்போதும். ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை எனக்கு அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அந்த மந்திரத்தை முதலில் அவர் சொல்லக் கேட்டதுதான் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. என்ன ஏது என்று தெரிந்தும், தெரியாமலும் தலைமுறைகளாய் அந்த மந்திரம் இடைவிடாது எங்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வீட்டுக்குள் போய்விட்டு வருகிறேன் என்று ஏனோ அப்பத்தாவின் சமாதியிடம் சொன்னேன். அப்பத்தாவிடம் சொன்னால் தாத்தாவிடம் சொன்னது போல…. அப்பத்தாவை கடைசி காலம் வரை தாத்தா அதட்டிக் கொண்டேதான் இருப்பார். சிவகாமி என்னும் அப்பாத்தாவின் பெயரை அவர் சிவந்தாயி என்றுதான் கூப்பிடுவார். அதட்டி அதட்டி அவர் பேசுவதும் அப்பத்தா அவருக்குப் பணிந்து பணிந்து ஓடுவதும் என்று எல்லாமே ஒரு வித நடிப்புதான். அவர்களுக்குள் அன்பு நிறையவே இருந்தது. அவர் அதட்டுவதைப் போல அப்பத்தாவுக்கு அடங்குவார், அப்பத்தா அடங்குவது போல அவரை ஆள்வார். பொதுவாக கணவன் மனைவிக்கிடையே இப்படி ஒரு கட்டமைப்பை நம் சமூகம் திட்டமிட்டே உருவாக்கி வைத்திருக்கிறது. மேலோட்டமாக நம் சமூகக் கட்டமைப்பை பார்த்தால் பெண்களை ஆண்கள் அடக்கி ஆள்வது போலத் தோன்றும் நிஜத்தில் அது உல்டாவாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. இது நம் சமூகத்தை உணர்வுப்பூர்வமாய் ஆழ்ந்து உற்று நோக்கினால் விளங்கும். இது போக விதிவிலக்கான விசயங்கள் இந்த உலகின் எல்லா மூலைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. கொல்லைக் கதவினைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தேன். மனிதர் வசிக்காத இடங்களுக்குள் எல்லாம் ஒருவிதமான அமானுஷ்யமான தெய்வீகத்தன்மை உட்புகுந்து விடுவதாகவே நான் கருதுகிறேன். வீட்டிற்குள் இருந்த பேரமைதி மனசை ஏதோ செய்தது. எத்தனையோ பேருக்கு சமைத்துப் போட்ட அந்த அடுப்படியில் மண் அடுப்புகள் இன்னும் ஏழு தலைமுறையின் பசியைத் தீர்க்க நாங்கள் தயார் எங்கே போனீர்கள் மனிதர்களே என்று என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதைப் போல இருந்தது. ஓடு வேய்ந்த அந்த வீட்டின் ஒவ்வொரு பனைமர உத்திரங்களும் தாத்தா வைத்த மரங்கள்தானாம். ஓடுகளும், செங்கல்லும் நாட்டரசன் கோட்டை செட்டியார்களிடம் சொல்லி வைத்து வாங்கியதாம், இது போக கண்ணாடிகளும், ஜன்னல் கதவு, அலமாரி பலகைகளும் பர்மா தேக்கில் செய்தது என்று அடிக்கடை அப்பத்தா சொல்லும். சுவற்றில் கை வைத்து தேய்த்துப் பார்த்தேன் சில்லென்று இருந்தது. சுவற்றில் சாந்து பூசி கடைசியில் வளவளப்பிற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி தேய்ப்பார்களாம்…. அடுப்படிக்கு அப்புறம் ஒரு இரண்டாம் கட்டு இருக்கிறது அதன் இரண்டு புறமும் இரண்டு பெரிய அறைகள். ஒற்றைப் பலகையால் ஆன கனமான கதவு அது. இரண்டு அறைகளுக்குள்ளும் இப்போதும் விளக்கு இல்லையென்றால் உச்சிப் பகலில் கூட நடுநிசியைப் போல இருட்டாயிருக்கும். எனக்கு விபரம் தெரிந்த பின்புதான் கரண்ட் இழுத்தோம் வீட்டிற்கு அதுவரையில் அரிக்கேன் விளக்குதான். பழைய பாட்டில்களுக்குள் சீமை எண்ணையை ஊற்றி அதன் மூடியில் ஓட்டை போட்டு சீலைத் துணியை திரியாக்கி காண்டா விளக்கு செய்யும் வேலையை அப்பத்தாதான் சொல்லிக் கொடுத்ததாம் அந்த கிராமத்துக்கு. வீடு முழுதும் வேப்பம் பலகைகளை மேலே வைத்து அடைத்திருப்பதால் வீடுஎப்போதும் குளுமையாகவே இருக்கும். யாருமில்லாத அந்த வீட்டிற்குள் தனியாய் நின்று கொண்டிருந்தேன். எங்கே எல்லோரும் போனார்கள்…? எங்கே இங்கே நிலை கொண்டிருந்த வாழ்க்கை? இரவும் பகலும் நிரம்பி வழிந்த வீடு எப்படி வெறிச்சோடிப் போனது? யோசித்துக் கொண்டே ஹாலின் ஓரத்தில் இருந்த எச்சிப் பலிங்கானைப் பார்த்தேன். தாத்தா வெற்றிலை போட்டு துப்ப அதில் மண் நிரப்பிக் கொடுப்பார்கள். சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பானைகள். சட்டிகள், அலுமினியம், மண் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள், அண்டாக்கள், ட்ரங்க் பெட்டிகள், குளுமை எனப்படும் நெல் கொட்டும் பத்தாயம், எல்லா சுவாமிகளும் நிறைந்த பூஜை அறை என்று மெளனமாய் ஏதேதோ கதைகள் சொன்ன வீடு என் காலத்திற்குப் பிறகு அதன் பழமையைக் நினைவு கூறக் கூட ஆளில்லாமல் போகப்போகிறது. தாத்தாவின் புகைப்படங்கள் நிறைய வீட்டில் இருக்கிறது. அவர் அப்பத்தா கூட இருந்து எடுத்த புகைப்படத்தில் எல்லாம் கர்ண கம்பீரமாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மனைவி பக்கத்தில் நின்றால் என்ன அவளை சட்டை எல்லாம் நான் செய்வது இல்லை என்பது போல ஒரு அலட்சியமான பார்வையோடு அவரும், எனக்கு எல்லாமே அவர்தான் என்பது போல அப்பத்தாவும் நின்று கொண்டிந்தார்கள். கண்டாங்கி சேலையோடு அள்ளிக் கட்டிய தலையோடு காதில் தொங்கட்டான், மூக்கில் புல்லாக்கு, மூக்குத்தி, அழுத்தம் திருத்தமாய் விபூதி, குங்குமம் என்று அப்பத்தா தான் எவ்வளவு அழகு. அப்பத்தா இளமையில் அவ்வளவு அழகாய் இருந்திருக்கிறது.அத்தனை உயரம் இல்லை என்றாலும் இரண்டு ஆளை தனியாய் நின்று அடித்துப் போடுமளவிற்கு கட்டுமஸ்தான உடல்…. அப்பாவின் இளவயது புகைப்படம் அத்தனையும் என் மூத்த தம்பியைப் போலவே இருந்தது. முறுக்கிய மீசையோடு அப்பாவும் அம்மாவும் இருந்த அந்த புகைப்படம் அவர்கள் திருமணம் முடிந்த பின்பு எடுத்தாய் இருக்க வேண்டும். அந்தக் கால சிவாஜியும் சரோஜாதேவியும் சட்டென்று என் நினைவுக்கு வந்தார்கள்….அத்தைகள், மாமாக்கள், சித்தப்பாக்கள், அத்தை பிள்ளைகள், மருமகன்கள்….என்று எல்லா உறவுகளும் ஹால் சுவரெங்கும் புகைப்படங்களில்…. தாத்தா எப்போதும் படுக்கும் இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன். இப்போது தாத்தாவும் இல்லை, அப்பத்தாவும் இல்லை, அப்பாவும் இல்லை…. ஆதாரமில்லாத ஆதாரத்தோடு அந்தரத்தில் நிற்பது போலத் தோன்றியது சுவற்றில் கன்னத்தை வைத்து அழுத்திக் கொண்டேன். சில்லென்று சுவர் என் கன்னத்தில் பட அந்த வீடு என்னை அணைத்துக் கொண்டது போலத் உணர்ந்தேன். வாழ்க்கை சுழற்சி இதுதான் நான் என்னைத் தெரிகிறதா என்று என்னை பார்த்து கேட்டு விட்டு எனக்காய் காத்திருப்பது போலத் தோன்றியது…. நான் தேம்பி அழுது கொண்டிருந்தேன்….. காலம் சரியாய் என்னை விட்டால் எங்கே நான் இறக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது எனக்கு. அப்பத்தா, தாத்தாவின் சமாதிக்கு போக எழுந்தேன்….அந்த மண்ணுக்குள் புதைந்து கொள்ளும் வரம் மட்டும் காலம் எனக்கு கொடுத்தால் போதுமென்ற எண்ணத்தோடு கால்களை அழுந்தப் பதிந்து நடந்து கொண்டிருந்தேன்….!

மூலப்படிவம்

307 total views, 1 views today

Share Button