2ஜி வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ.ராசா சாட்சியம் பதிவு.

2ஜி வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ.ராசா சாட்சியம் பதிவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாற்றப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது சாட்சியத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

2ஜி வழக்கு தொடர்பாக குற்றம் சாற்றப் பட்டவர்களின் தரப்பு சாட்சியமாக, தன்னை சேர்க்கக் கோரி நீதிமன்றத்தில் ஆ.ராசா மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்தார். இதையடுத்து, குற்றம் சாற்றப்பட்ட தனது தரப்பிலான முதலாவது சாட்சியாக அவரே 01.07.2014 செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது தனது பணி குறித்தும், 2ஜி அலைக்கற்றையை ஏலமின்றி தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்கு என்ன காரணம்? அவை தொடர்பாக யார், யாருக்கு எல்லாம் தகவல் தெரிவிக்கப்பட்டது? மத்திய அமைச்சர்கள் குழுவிடமும், பிரதமரிடமும் ஏலமின்றி அலைக்கற்றை ஒதுக்கும் முடிவை தெரிவித்தது உள்ளிட்ட விவரங்களை ராசா விளக்கினார்.

மதிய உணவு இடைவேளைக்கு சில மணி நேரம் முன்பாக, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சாட்சியத்தை புதன்கிழமை தொடர்ந்து பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியிடம் ஆ.ராசா கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, ராசாவிடம் புதன்கிழமை தொடர்ந்து சாட்சியம் பதிவு செய்யப்படும் என்று நீதிபதி சைனி கூறினார்.

இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா, தனது தரப்பு சாட்சிகளாக மக்களவைச் செயலக இணை இயக்குநர் ஜே.பி.எஸ்.ராவத், மத்திய சுங்கம், கலால் மற்றும் சேவை வரி வழக்குகள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் கூடுதல் ஆணையர் ரஞ்சன் கண்ணா ஆகியோரை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

325 total views, 1 views today

Share Button