அக்னிப் பறவைகள் : அத்தியாயம்-7

-லதா சரவணன்

pic 4

கருணையே அலையாய் பொங்கி
வந்த கடலில் அனலாய் திரண்ட
சுனாமியின் சுவடுகளாய் மூதூர்.
அரைவயிறு கஞ்சியின் ஆசையும்
கலைந்து, உலை வைக்கவே திண்டாடி
முத்தென பெற்ற செல்வத்தை பதியனாய்
அயல் மண்ணிற்கு விதைத்தனர்.
இளமையில் வறுமை ஏட்டினில்
பதிந்த சொற்கள்…. நிஜத்தில் அதன்
கோரப்பற்களுக்கு பிஞ்சுகளின் சதைகள்
உணவென நிறைகிறது.
சொந்தங்களை சூறையாடிய கடல் மீதே
இதோ எதிர்காலத்திற்கு வழி தேடிப்
போகிறேன் என்று குதூகலக் குரலோடு
சவூதியை நோக்கி ஒரு கோடி நம்பிக்கை
விதைகளை சுமந்து பயணமானாள் ரிஸானா.
இமைகளின் விழியாய் இருந்த பெற்றோர்
மடியில் தவழ்ந்த புத்தகக் குவியல் என்று
நிதம் நிதம் கடந்தவள். இன்று அன்னிய
தேசம் அர்த்தங்கள் புரியாத அடக்குதலில்
அநாதையாய் போன உணர்வு,,,,
மனக்கண்ணில்
பயத்தை அடைத்துக்கொண்டு….!
அவள் பயணம்.
மருதோன்றியின்றி மாயச்சிவப்பை ரசிக்க
வேண்டிய கைகளில், இரத்தம் கன்றி இறுகினாற்
போல்,,,, ஒட்டு மொத்த பணிச்சுமையிலும்,
வறுமையை விரட்டுகிறேன் என்ற நினைப்பில்
அந்த மூதூரின் முத்து…….
மண்ணோடு மண்ணாய் !
செடியில் இருந்து பிடுங்கி எறியப்படும்
மலரைப் போல பிய்த்து எரிந்த அந்த
பிஞ்சின் சிரம்………கேள்வி கேட்கிறது.
என் தவறென்ன நடந்ததில்………..
வறுமையில் பிறந்ததா
படிப்பைத் துறந்ததா
பெற்றோரைப் பிரிந்ததா…
இமைகள் இமைக்க மறந்து
பணிகள் செய்ததா……..
எது என் தவறு ?
சில தினங்களுக்கு முன்பு நாம் பத்திரிக்கையில் படித்ததுதான் ரிஸ்வானா என்னும் சிறுமி கொல்லப்பட்டதைப் பற்றி,? ! எத்தனை பெண் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை விட்டு வறுமைக்காக கடல் கடந்து அந்நிய தேசத்தில் ஐந்துக்கும் பத்துக்கும் அடிமைப்பட்டு வீட்டுவேலை செய்கிறது, இப்படி கொண்டு செல்லப்படும் பிள்ளைகள் வேலைக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறார்களா ? என்ற கேள்வியும் மனதில் எழத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட ஏழை குழந்தைகளின் வாழ்வில் புயலாய் வரவே சிலர் சுற்றி வருகின்றனர். கஷ்டப்படும் குடும்பங்களை குறிவைத்து அந்ந பிள்ளைகளை கூட்டிச்செல்லவது தான் இவர்களின் இலக்கு அதிலும் பெண்பிள்ளைகள் என்றால் இரண்டை கனி புசிப்பதைப் போல் திருப்தியடைவார்கள். அதே போல் அழைத்து சென்று விபச்சாரத்தில் தள்ளப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஏராளம். சில கண், காது உறுப்புகளை ஊனப்படுத்தி பிச்சைத் தொழிலுக்கும் புகுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே கஷ்டப்படும் குடும்பங்கள் இவர்கள் எங்கே தங்கள் பிள்ளைகளைத் தேடப்புறப்படுவார்கள் என்று எண்ணம். இப்படி எல்லா செயல்களிலும் ஏதாவது ஒரு பெண் பாதிப்பபடுகிறார்கள். அவள் முழுமையான பெண் மட்டுமில்லை சிறுமியாக இருந்தாலும் கூட ?!
மூதூரில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து தன் ஏழ்மையை எதிர்த்துப் போராடிட வேலைக்குச் சென்றவள் அவள், இரண்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் படியும் வீட்டுப்பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது அந்த சிறுமிக்கு. குழந்தைகளின் தாய் இந்தக் குழந்தையை நம்பி விட்டு சென்றது யார் குற்றம், தன் குடும்ப நலன் கருதி தனக்குத் தரப்பட்ட மிதமிஞ்சிய வேலைகள் எதிலும் குறை வைக்கவில்லை அவள், ஆனால், விதி வேறு விதமாய் அல்லவா விளையாடியது. அந்த சிறு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது புரையேறிப்போக தனக்கு தெரிந்த வைத்தியம் என்று அவள் முதுகை நீவிவிட்டு இருக்கிறாள். குழந்தையின் விதியோ அன்றே முடிந்துவிட்டிருக்கிறது. சிறு பெண்ணை நம்பி குழந்தையை விட்டுவிட்டு ஊர்சுற்றப்போனது அந்த் தாயின் குற்றமாய் கருதப்படவில்லை ஆனால் அவளின் குழந்தையை கொன்று விட்டாள் என்று தன் பிள்ளை வயதில் உள்ள ஒரு சிறுமியின் உயிரையே பறித்திருக்கிறாள் அந்தத்தாய்.

அவளின் வாதத்தை ஏற்று ஊர் மத்தியில் ரிஸானாவின் தலையை வெட்டி வீழ்த்தியிருக்கிறது அரசாங்கமும், எத்தனை கொடூரமான செயல் இது, தான் பெற்ற குழந்தையின் மேல் அக்கறை கொள்ளாமல் அதையும் இழந்து பிறர் குழந்தையின் இறப்பிற்கும் காரணமான அந்தத் தாயை அல்லவா கொல்ல வேண்டும். சட்டங்கள் என்றுமே ஊமையாகவும், கண்ணிழந்தவைகளாகவுமே இருக்கிறது. இருந்து வருகிறது.
நம்மிடையே ஒரு பழமொழிஉண்டு பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்று !

14 வயதுப்பெண் தன் வீட்டில் சென்ற வருடம் திருணமாகி போன அக்காவும், மாமாவும் வீட்டிற்கு விருந்திற்கு வரப்போகிறார்கள் என்று சந்தோஷமாய் இருந்தவளை நான்கு நாட்களிலேயே வீட்டில் ஆளில்லாத சமயம் பார்த்து அக்காள் கணவன் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியிருக்கிறான். வெளியே சொன்னால் அக்காவைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறான். அதனால் பயந்த பெண் வீட்டில் சொல்லவில்லை, ஒருவாரம் கழித்து தாய் தன் மகளின் உடலில் உள்ள காயங்களைக் கண்டுபிடித்து என்ன நடந்தது என்று கேட்க, அந்த பெண்ணும் எல்லாவிஷயத்தையும் சொல்லி அழுதிருக்கிறாள். மானம் போய்விட்டது மருமகனிடம் கேட்டால் இன்னொரு மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்று நாம் மூன்றுபேரும் இறந்து விடலாம் என்று சொல்லிய தாய் வெளியே சென்று சில நொடிகளில் தந்தையே அந்தப்பெண்ணின் கழுத்தைத் திருகி கொலை செய்திருக்கிறான்.

பதறிய தாய் காரணம் கேட்டதற்கு அவளால் நம் குடும்ப மானம் பறிபோய்விட்டது இனிமேல் அவள் இருந்து புண்ணியமில்லை, அவள் பொருட்டு நாம் ஏன் சாகவேண்டும் என்று அதனால்தான் கொன்றுவிட்டேன் என்று இலகுவாகக் கூறியிருக்கிறான். சென்ற சம்பவத்தில் நடந்ததைப் போலத்தான் இதிலும், தவறு என்பதை அந்தப்பெண் தெரிந்து செய்யவில்லை, அவளே அதில் பாதிக்கபட்டு ஒரு ஒழுக்கங்கெட்ட ஆணின் இச்சைக்கு பலியாகியிருக்கிறாள் இழப்பும் அவளுக்குத்தான் தண்டனையும் அவளுக்குத்தான். அப்படி மானரோஷம் பார்க்கும் தந்தை என்னசெய்திருக்க வேண்டும், தன் மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை கொன்றிருக்க வேண்டும்.

காலங்ககாலமாக தவறுக்கும், தண்டனைக்கும் பெண்கள் மட்டும் தான் காரணமாகிறார்கள். இல்லையென்றால் டெல்லி பெண் சம்பவம் நடந்திருந்தபோதும், பெண்கள் தொடர்பான பாலியல் பிரச்சனைகளின் போதும், நானும் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று பெண்களின் உடைதான் பெரும்பாலும் தொல்லைகளுக்கு காரணம் என்று சொல்லியிருப்பார்களா ? அதைவிடவும் கொடுமை பிரபல சாமியார் தற்போது தன் விடுதியிலேயே ஒரு பெண்ணை கற்பழித்திட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருப்பவர் இந்தப் பிரச்சனை நடக்கும் போது என்ன சொன்னார் தெரியுமா ? வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் அந்த ஆணை அண்ணா என்று அழைத்திருந்தால் அவன் மனம் திருந்தியிருப்பான் என்று ? எத்தனை முட்டாள்தனமான வாதம் பாருங்கள். நமக்குரிய பாதுகாப்பினை நாம் தான் தேடிக்கொள்ளவேண்டும்.

இது பள்ளித் தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வரும் காலம் எத்தனையோ பிள்ளைகள் வெற்றிக் கட்டிலில் மிதந்திருக்க, சில பிள்ளைகள் தான் தேர்வில் தோல்வியடைந்துவிட்டேன் என்று தவறாக எண்ணங்களை மனதில் விதைத்து, தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். தோல்வியின் பயத்தினால் எழும் கேள்விகளைப் பற்றிய கதை கூட உண்டு.

பள்ளியிறுதியாண்டு மாணவன் தேர்வில் தோல்வியடைந்ததற்காக நான் இறக்கப்போகிறேன் என்று தாயிடம் அம்மா நான் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றானாம். உடனே வீட்டில் கயிறு, புடவைகள் போன்றவற்றை எடுத்து மறைத்துவைத்தாராம் அம்மா, அதைக்கண்ட அவன் நான் பூச்சி மருந்து குடிக்க போகிறேன் என்றானாம். உடனே பூச்சி மருந்து போன்ற பாட்டிலை கொண்டு போய் தெருவில் வீசி விட்டு வந்தாராம் தாய். மீண்டும், அவன் நான் கத்தி வைத்து என் மணிகட்டை அறுத்து தற்கொலை செய்யப்போகிறேன் என்றானாம் , உடனே வீட்டில் உள்ள அரிவாள்மனை, கத்திரி , கத்தி எல்லாவற்றையும் அப்புறப்படுத்தினாளாம் தாய்.மறுபடியும், நான் கரண்ட்டில் கைவைக்கப்போகிறேன் என்றானாம். அவளும் மெயினை அணைத்துவிட்டு வேண்டாம் என்றாளாம். இறுதியில் அவன் நான் போய் மூக்கைப் பிடித்துக்கொண்டு மூச்சு முட்டி சாகப்போகிறேன் என்றானாம்.
அதுவரையில் பதறிய அந்தத்தாய், அமைதியாய் சரி போய் சாவு என்றாளாம் இதைக் கேட்ட மகனுக்கு கோபம் என்னம்மா நீ பெற்ற பிள்ளை நான் சாகப்போகிறேன் என்கிறேன் நீ செத்துப்போ என்கிறாயா ? எனகேள்வி கேட்க, அதற்கு அந்த அம்மாவோ இறப்பதற்கு இத்தனை யோசித்தாயே மகனே ஒரு முறையாவது வாழ வேண்டும் என்றும், எப்படி இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு வருவது என்று யோசித்திருந்தால் நல்லாயிருக்குமே, இப்படி யோசிக்கத் தெரியாமல் கோழையாய் நீ வாழ்வதைவிடவும் சாவதே மேல் என்றாராம். தோல்வி முடிவு அல்ல, அது முற்றுப்பெறுவதும் இல்லை, நடந்து முடிந்து விட்ட விஷயங்களை யோசித்தே நாம் வாழ்க்கையை நாட்களை நிமிடங்களை கடத்தி விடுகிறோம். ஆனால் நடக்கப்போகும் நாம் கடக்கப்போகும் வருடங்களை யோசிக்கத் தடுமாறுகிறோம்.
இனி தற்கொலை என்னும் தூண்டிலில் யாரும் சிக்கவேண்டாம் என்று மாணவ-மாணவிகளை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நமக்கென்று ஏதும் உருவாக்கப்படுவதில்லை, நாம் தான் அதை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமாய் சிந்தியுங்கள். நடந்து விட்டதை மாற்ற முயலாதீர்கள். தீர்வுகளை தேடி ஓடுங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் தனிமனித ஒழுக்கம் தவறிப்போவதே அதைப்பற்றிய விவாதங்கள் அடுத்த தொடரில்…………!

499 total views, 1 views today

Share Button