கேலியா கேளிக்கையா

-சங்கீதா பாக்கியராஜா

Staring, Hooting, Ogling, Cat calling என்று பல்வகையில் சொல்லப்படும் பெண்களைக் கேலி செய்தல் உலகமெங்கும் மனிதம் மதிக்கும் நபர்களால் தொடர்ந்து பரவலாக கண்டிக்கப்பட்டு வருகின்றது.

என்னைப்பொறுத்தவரையில் சிரித்துக்கொண்டே அவர்களைக் கடக்க வைக்கும் கள்ளமில்லாத சில ஆண்களின் கேலியை அனுமதிக்கலாமென்று நினைக்கிறேன். ஆபாசமான வர்ணனைகள் குத்திக்கீறி குருதி வரவைத்த பல கொடும் அனுபவங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் இது அத்தனை பாவமாக தெரியாது.

ஒரு பெண்ணை ஆபாசமாக வர்ணிப்பதற்கு அவள் பெண் என்பதே பல சமயங்களில் காரணமாக அமைய, அவள் பிரபலம், She is a public figure என்பதும், அதனால் அவளை ஆபாசமாய் வர்ணணை செய்ய முடியும் என்ற மனப்பாங்கும் வளர்ந்து கொண்டு வருவதை இப்போ பரவலாக காணக்கூடியதாக இருக்கிறது

ஒருத்தி தன் திறமைக்காக, அறிவுக்காக, அன்புக்காக, ஏன் அங்கங்களுக்காகவேனும் பிரபல்யமாகட்டும். பொதுவெளியில் அவளும் ஒரு ஆளுமையாக, நட்சத்திரமாக, அரசியல்வாதியாக, கலைஞராக ஏன் விபச்சாரியாக கூட நடமாடட்டும். ஆனால், அது மட்டுமே ஒருத்தியை ஆபாசமாக வர்ணிப்பதற்கு கிடைக்கும் தகைமை என்று நினைக்கும் தற்குறிகளைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இத்தனைக்கும் இத்தனை அசிங்கமாக சொல்லும் இவர்கள், தங்கள் வீட்டுப் பெண்களை பற்றி யாராவது தப்பாகச் சொன்னால் சும்மா இருப்பதில்லை என்பது முரண்நகை.

இன்றும் தூஷணம் எனப்படும் கெட்டவார்த்தைகளில் அநேகம் வீட்டுப்பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாக அமைந்திருப்பதால் தான் அதனை கேட்கும் ஒவ்வொருத்தருக்கும் நரம்பு புடைத்து வருவதும், ரத்தம் கொதிப்பதும், சொன்னவளை அல்லது சொன்னவனை அடித்து நொறுக்குவதும், அதே சொற்களால் அவனின் /அவளின் பரம்பரையையே வீதிக்கு இழுப்பதும் நடக்கிறது.

பெண் எப்போதும் பெண்தான்.

ஆனாலும், உங்கள் வீட்டுப் பெண் தேவதை, மற்றவர்கள் தேவடியாள் என்று நினைப்பு மனசுக்குள் தோன்றுவது தான் இப்படி ஆபாசமாய் பேசவும், சித்தரிக்கவும் காரணம்ன்னு நினைக்கிறேன். அங்கங்களைக் காட்டுபவளோ, ஏன் விபச்சாரியோ, அவள் எதற்காக பொதுவெளியில் வந்தாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும். அது கிடக்க, பொதுவெளியில் இருப்பதனால் அவளை பொதுவுடமை போல பார்ப்பது தான் கூடாது என்கிறேன். அதற்கான உரிமையை யாருக்கும் அவள் கொடுக்கவில்லை.

மன்னித்துக்கொள்ளுங்கள்!

உங்கள் வீட்டிலிருக்கும் அம்மாவை, அக்காவை, தங்கையை, மனைவியை ஏன், பாட்டியை பார்த்து யாராவது ஏதாவது சொன்னால் ஆண்களே நீங்கள் பொங்கி எழுந்திட மாட்டீங்களா? அவர்களின் மார்பை பார்ப்பவர்களையே அடித்து நொறுக்க எத்தனிக்கும் எத்தனை ஆண்கள் மற்ற பெண்களை பார்த்து அசால்ட்டாக முலை அழகு என்று சொல்லி கடந்து விடுகிறீர்கள்?

வால்மீகி முனிவராக மாறிய கதை தெரியும் தானே.. தன் மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவுமே வழிப்பறி செய்வதாக சொன்ன அந்தத் திருடரை ‘உன் மனைவி மக்களும் உன் பாவத்தில் பங்கு கொள்வார்களா’ என்று கேட்ட முனிவர் கூட்டத்திற்கு பதில் சொல்வதற்காக அவர்களிடம் சென்று விடை கேட்ட போது ‘எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை .நீ செய்யும் பாவங்களில் எமக்கு எவ்வித பங்கும் இல்லை ‘ என்று அவர்கள் சொல்வதாக அந்தக் கதை செல்கின்றது.

ஒருவனின் நடத்தைகளுக்கு அவன்தான் பொறுப்பு என்பதை விளக்கும் இந்தக் கதையில், அவன் மனைவி மக்கள் கொண்டுள்ள அபிப்பிராயம் மீதே ஒருவனுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்பதையும், அவர்களும் தனி மனிதர்களே என்று நூற்றாண்டுகளுக்கு முன்னே வரையறுத்து தெரிவித்தமையும் மறைந்துள்ளதையும் கவனிக்க மறந்துவிடுகிறோம்.

குடும்பத்திலுள்ளவர்களின் கருத்துக்கே உரிமையில்லாத ஒரு மனிதன், எப்படி மற்றப் பெண்கள் பற்றி அவதூறாயோ, அசிங்கமாயோ கருத்துரைப்பதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று எடுத்துக்கொள்கின்றார்?
பெண்களை வர்ணிப்பது தவறில்லை.. அந்தக்கால புலவர்கள் முதல் இந்தக்கால நவீன கவிஞர்கள் வரை அதைத்தான் செய்கின்றனர். சாண்டில்யன் முதல் ரமணி சந்திரன் வரை அத்தனை பேரும் பெண்களை, அவர்களின் அங்கங்களை சித்தரிக்கிறார்கள். அதை முகம் சுழிக்கும் படி செய்ய வேண்டாம் என்பதே என் கோரிக்கை..

சரி இத்தனையும் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாதிருக்கலாம். இதையாவது சிந்தியுங்கள்..

எல்லோர் உடலிலும் வாயு பிரிந்து செல்வது (flatulence/farting) சாதாரணமானது தான். வீட்டிலிருக்கும் போது சாவதானமாய், சத்தத்துடன் ஏன் நாற்றத்துடனும் அதை ஏதோ சாதித்து விட்டது போல வெளியேற்றுகிறோம். இதையே ஒரு பொது இடத்தில் செய்ய முடியாதில்லையா.. அங்கு நாசூக்காய், நாலு பேருக்கு தெரிந்துவிடக்கூடாதென்று நினைத்து, யாரும் அறியாமல் செய்கின்றோமா இல்லையா (ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து). இதையே பெண்களை நோக்கிய உங்கள் தனிப்பட்ட ஆபாசமான பார்வையிலும் கடைப்பிடித்தால் என்ன?

ஒவ்வொருவருக்கும் பல முகம் இருக்கும். சிந்தனைகள் கோடி இருக்கும், விருப்பங்கள் அதிகம் இருக்கும், பாலுணர்வு, பெண் பற்றிய பார்வை, நோக்கம், அபிப்பிராயம் ஆயிரம் இருக்கும். இடக்கரடக்கல் இன்றி தம் வீட்டுப்பெண்களை மட்டுமல்ல, எந்தவொரு பெண்ணையும் ஆபாசமாக பொதுவெளியில் சித்தரிப்பது தவறு, அதற்கான உரிமை யாருக்கும் இல்லை என்பது என் கருத்து.

530 total views, 1 views today

Share Button