அக்னிப் பறவைகள் : அத்தியாயம்-6

-லதா சரவணன்

pic 3

சிட்டுக்குருவியே
காத்துக்கிடப்பது திண்ணை மட்டுமல்ல
தானியங்களை இரைத்து இரைத்து
மறுத்துப்போனது கரங்களும்……!

ஒன்றாய் வராமல் உவகையாய்
ஒற்றுமையாய் குவிந்து…
துள்ளிக்கொண்டு சின்னஞ்சிறு
சிறகு விரித்து

சருகாய் உரிந்துபோன என் மனதிற்கு
ஆறுதலாய்….வாசல் தேடி வந்த
சாம்பல் நிறத்து தேவதையே
உள்ளம் குதூகலிக்கும் உன் வருகையால்!

கொட்டிக்கிடக்கும் தானியங்களை
குட்டி குட்டி அலகால் சுவைத்திடும்
காட்சியில் சொக்கி போய் திளைத்திருக்கிறேன்.

நம் அநேக ரகசிய சம்பாஷணைகளைப்
பரிமாறிய அந்த கீச் கீச் ஒலியை காணாமல் தவிக்கிறேன்.

இன்று திண்ணைகள் வாடிக்கிடக்கிறது
உன் சின்னஞ்சிறு விரல் பதிவுகளை தேடிக்
களைப்படைகிறது

எவர் கூண்டில் நீ
சிறைப்பட்டு போனாயோ
இல்லை இனி வாசம் என மனம் வெறுத்து
பட்ட மரக்காம்பில் வாசல் தேடிக்கொண்டாயோ

காத்திருக்கிறேன் அதே ஜன்னல் கம்பிகளில்
உன் கீச்…. என்னும் கீதத்தைக் கேட்க,
நினைவிருக்கிறதா, முன்பொரு முறை
பறந்து வந்து பார்வைகளால் பரிதவித்து நீ
போனது… அன்றுதான் நான் உனை
கடைசியாய் கண்டேன்….!

கம்பிக்கூடு என்று உன் மரணக்கூட்டில்
கால் பதித்துவிட்டாய் என்று அறிந்து
கொண்டேன். எங்கிருந்தோ இனம் பேசும்
பேச்சிற்கு உதவிய கருவி இன்று உன்
இனத்தின் அழிவிற்கு உதாரணமாய்
உள்ளது என அறிந்து மனமுடைந்தேன்

இருப்பினும் வசதிகளை போக்கிக்கொள்ள முடியவில்லையே
இயந்திரங்களுக்கு உணர்விருப்பதில்லை,,,,,,
நானும் மனித வடிவில் இயந்திரமாகிப்போனேன்.
இருப்பிடங்களை தொலைத்த உனக்கு உச்சுக் கொட்டிவிட்டு
என் இயலாமையை கூவிக்கொண்டு இருக்கிறேன்

ஒன்று மட்டும் செய்ய முடிந்தது என்னால்
உன் குரலை அழைப்பொலியாய்
வைத்திருக்கிறேன்

உன் அலைவரிசையை சுமந்தது என்
அலைபேசி மட்டுமே……!
இன்று இப்படித்தான் பல குழந்தைகள் குருவிகளாய் தங்கள் சுயத்தை தொலைத்து வளருகிறார்கள். அவர்களை நாம் இயல்பில் வளர விடுவதில்லை, சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன் வெகு அருமையான நீண்ட நாட்களுக்கு பிறகு விளம்பரத்தின் மீது ஒரு நம்பிக்கையை அது உருவாக்கியது. ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண்குழந்தை கவிதை எழுதிக்கொண்டு இருப்பாள். அதை கவனித்த ஆசிரியர் அப்பெண்ணிடம் நீ என்ன அடுத்த ஷேக்ஸ்பியரா ? என்று கேட்க, அப்பெண் கூம்பிய முகத்துடன் நான் முதல் அனிதாவாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறும். ரசனையான அதே நேரத்தில் ஒப்பிடுதல் தவறு என்பதை சுட்டிக்காட்டும் நிகழ்வாய் ஒரு பாடமாய் அந்த விளம்பரம் என் கண்ணில் பட்டது.

ஒருமுறை நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, வீட்டிற்குச் செய்யும் ஒவ்வொரு செலவுகளையும் அவரின் பதினைந்து வயது மகன் குறித்துக் கொண்டு இருந்தான். அச்சமயம் அத்தெரு கோவில் விசேஷத்திற்காக யாரோ சிலர் பணம் கேட்டு வந்திருந்தார்கள். மாதக்கடைசி வேறு எவ்வளவு தருவது என்று நண்பருக்கு குழப்பம். மகனிடம் ஆலோசனை கேட்டார், உடனே அவனும் சிறிய நோட்டு புக்கைப் பார்த்துவிட்டு 50ரூபாய் தரலாம் அப்பா என்றான். எனக்கு ஆச்சரியம். சின்னப்பையன் நீங்கள் செய்யும் செலவுகளை எல்லாம் அவனிடம் கேட்டு செய்கிறீர்களே ? என்று கேட்டதும். பசங்க எல்லா கஷ்டநஷ்டத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும் அப்படி உணர்ந்து இருப்பவர்கள் நல்ல நிலைமைக்கு கட்டாயம் வருவார்கள். நான் என் சம்பளப்பணத்தையும், என் மனைவியின் சம்பளப்பணத்தையும் கையில் தந்துவிடுவோம் அவனும் வீட்டுசெலவுகளை கணக்குப்போட்டு இத்தனை சேமிப்புக்கு இது செலவுக்கு அழகா எடுத்து தருவான். இப்போ குடும்ப வரவு செலவு கணக்கு எல்லாமே அவன்தான். என்றார் பெருமைபொங்க இப்படி அக்கறையோடு வளர்க்கும் பிள்ளைகள் எங்கேயும் கெட்டுப்போவதைக் கண்டிருக்கிறோமா ?

நம்முடைய கண்டிப்பு கூட அக்கறை கலந்ததுதான் என்று பிள்ளைகளுக்குப் புரியவேண்டும். ஒரு குழந்தை கண்ணாடிப் போன்ற பொருட்களை உடைத்துவிடுகிறது அம்மாவிடம் இருந்து திட்டு விழுமோ அடிவிழுமோ என்று கவலையோடு இருக்க, தன் குழந்தையிடம் மெதுவாய் நகர்ந்து ஏதும் பேசாமல் அந்த இடத்தை சுத்தம் செய்தார் அதன் அம்மா பிறகு குழந்தையின் மேல் ஏதும் கண்ணாடிப் பொருட்கள் இருக்கிறதா என்று தேடியபோது அத்தனை நேரம் மெளனமாக இருந்த அம்மாவை நோக்கி ஸாரிம்மா என்றது தத்தி தத்தி சொன்னது. பரவாயில்லைடா நீ இப்படி உடைச்சிகிட்டியே உனக்கு அடிபட்டு இருந்தா என்னவாயிருக்கும் ? ஆனால் நல்ல காலம் உனக்கு ஒண்ணும் ஆகலை, என்ன சொல்ல அம்மாவுக்கு இந்தப்பொருள் ரொம்பவும் பிடிக்கும் என்று சோகமாகச்சொன்னதும், மறுநாளில் இருந்து அந்தக் குழந்தை எந்தப் பொருளைக் கையாளும் போதும் அழகாக நாசூக்காக சர்வ ஜாக்கிரதையாகவும் கையாண்டது. இப்படித்தான் குழந்தைகளை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு புரிந்து கொள்ளும் படி சொல்லி நல்வழிப்படுத்த வேண்டும் அதற்கு சகிப்புத்தன்மை மிகவும் முக்கியம்.

அப்படியொரு சூழ்நிலையையும் நான் சந்தித்தேன், ஒரு பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தோம்.அப்போது அங்குள்ள ஒரு குழந்தை பொம்மை ஒன்றை எடுத்துவிட்டது. யாருக்கும் தெரியாமல், விஷயம் தெரிந்த அம்மா ஒரே அழுகை இப்படி பண்ணிட்டியே, யாராவது பார்த்தால் என் மானமே போய் விடுமே என்று இத்தனைக்கும் அது 5 வயது குழந்தைதான் ரொம்பவும் துருதுரு, பாவம் அப்போது அந்தக் குழந்தையின் பாட்டி அங்கே வந்தார். தாயின் புலம்பலால் பதறியபடி இருந்த அக்குழந்தையை அணைத்துக்கொண்டு, குட்டி நீ இப்படி தெரியமல் எடுத்துவந்து விட்டாயே பார்க்கிறவர்கள் என்ன சொல்லுவார்கள். நாளை நீ அந்த வீட்டுக்குப் போனதும் மறுபடியும் ஏதாவது பொருள் காணாமல் போய்விட்டால் உன்னைத் தானே தப்பாக நினைப்பார்கள். உனக்கு வேண்டியதை நான் வாங்கித்தருவேன் சரியா இனிமேல் இப்படி செய்யக்கூடாது எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, அம்மாகிட்டே சாரி சொல்லிடு. இல்லை இதுதான் வேணும் என்றால் எடுத்துக் கொள். ஆனால் யார் வீட்டிலிருந்து எதையோ கொண்டு வரும் பிள்ளை எனக்கு வேண்டாம் நான் உன்னிடம் பேசவே மாட்டேன் என்றதும்,

வேண்டாம் பாட்டி என்று சொன்னாற்போல் அழகாய்த் திருப்பித் தந்தும் விட்டது. எத்தனையோ தவறான சூழ்நிலைகள் நம் பிள்ளைகளைச் சுற்றி வட்டம் போட்டு வருகிறது. அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

அன்றிலிருந்து சில நாட்களில் நான் வேறு ஒரு நிகழ்வைக் கண்முன்பு கண்டேன். எங்கள் துணிக்கடை நிறுவனம். காலை நேரப்பரப்பு வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக வர, அப்போது அம்மா மகள் என் இரண்டு பெண்மணிகள் ஒரு இரண்டரை வயது குழந்தையுடன் வந்திருந்தார்கள். யாரும் பார்க்காத சமயத்தில் ஒரு புடவை எடுத்து அந்த வயதான பெண்மணி தன் கைப்பையில் வைத்துக்கொண்டார். இது கேமிராவில் பதிவானது எங்கள் கடை ஊழியர்கள் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியை என்னிடம் அழைத்து வந்தார்கள்.

நான் சாதாரணமாக அழைத்ததுமே, அது வந்து ஏன் கூப்பிட்டீங்கன்னு தெரியும். என் பையில் ஒரு புடவை இருக்கிறது அதை அவர்கள் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைக் கண்காட்டி இவள்தான் என்று சொல்லிவிட்டதும், எனக்கு கோபம் அதிகமாய் வந்துவிட்டது. நன்றாகத் திட்டியும் விட்டேன். எதற்காகத் தான் தண்டிக்கப்படுகிறோம் என்று தெரியாமலேயே அந்தக் குழந்தை அழுதது. இப்படிப்பட்ட தலைமையில் வளரும் அந்தப் பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும் ? நாளை ஏதேனும் தவறு செய்தால் இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார்கள்.

நம் குழந்தைகள் நம்மிடம் இருந்துதானே நல்லதையும் கெட்டதையும் கற்றுக்கொள்கிறது. ஆனால், நாம் அவர்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை. இயல்பிலேயே பெண்கள் பெரும் நெருக்கடியான நேரங்களில் கூட நிதானமாக முடிவெடுப்பார்கள். நெருக்கடியானதொரு நேரத்தில் அவர்களின் தெளிவாக திட்டமிடலும் தீர்வும் எனக்குப் பிரமிப்பைத்தான் ஏற்படுத்தியது. ஒரு துக்க நிகழ்விற்கு ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம். என் மகள்களிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டே என் அம்மாவிடம் மெதுவாக சொல்கிறேன். என் மகள் வந்து இடுப்பில் கைவைத்தபடியே இப்போ என்ன அம்மா நீங்க ஊருக்குத்தானே போகணும் நான் இரண்டு நாள் ஆச்சி வீட்டில் இருந்துக்கறேன். நீங்க என்னோட திங்ஸ்ஸை மட்டும் எடுத்து தந்துட்டு டிரைவர் அங்கிளை வந்து ஸ்கூலுக்கு கூட்டிப்போக வரச்சொல்லுன்னு கூலா சொல்லிட்டா ?

அந்த சின்ன வயசிலே அவளோட சட்டென்று எடுத்த முடிவு என்னை பிரமிக்கத்தான் வைத்தது. இதைப் போல் பிள்ளைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் கடந்து மன்னிக்கும் மறக்கும் மனப்பான்மையையும் சகிப்புத் தன்மையும் நாம் கண்கூடாக காணலாம், நம்முடன் யாராவது சண்டையிட்டாலோ திட்டினாலோ அவர்களிடம் நாம் பேசமாட்டோம். நம் கோபத்தை ஏதாவது ஒரு வகையில் காண்பிப்போம். ஆனால் கோபத்தில் விரட்டினாலும், அடித்தாலும் பத்துநிமிடம் கழித்து அம்மா என்று அழைக்கும் குணம் நம் பிள்ளைகளிடம் உள்ளது. தவறை மறக்க கற்று உறவை வளர்க்கும் உன்னதமே பிள்ளைகள் தான். எனவே நாம் நல்ல வழியில் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

இதைத்தான் லியோ டால்ஸ்டாய் என்னும் சிறந்த எழுத்தாளர் ஒருவர் சிந்தனையாளர் அவர் ஒரு நாள் பார்க்கில் அமர்ந்திருந்தாராம். அப்போது ஒரு 6வயது சிறுமி பந்து விளையாடிக் கொண்டிருக்க, அவரும் அந்தப் பெண்ணிடம் விளையாடினார். மாலை நெருங்கியதும் அந்தப் பெண்ணிடம் மேரி நீ வீட்டிற்குப் போய் உங்கம்மாவிடம் லியோ டால்ஸ்டாய்யுடன் விளையாடினேன் என்று சொல்லு அவர் மிகவும் பெருமைப்படுவார் என்று சொன்னாராம். அந்தப் பெண்ணும் அப்படியா அங்கிள் என்று சிரித்துவிட்டு நீங்களும் உங்கம்மாவிடம் போய் சொல்லுங்கள் நான் மேரியுடன் பந்து விளையாடினேன் என்று அவர்களும் சந்தோஷப்படவார்கள் என்று சொல்லியதாம். அதை ஒரு புத்தகத்தில் எழுதியவர் மேரியின் சின்னஞ்சிறு உதடுகளில் நான் என் அகம்பாவத்தைப் புரிந்து கொண்டேன் என்பதை எழுதியிருக்கிறார். இப்படித்தான் சில நேரங்களில் குழந்தைகள் தங்களின் சின்னக் கேள்வியால் நம்மை யோசிக்க வைத்துவிடுவார்கள்.

இப்போது அதிகம் டிவி நிகழ்வுகளைக் காண்கிறோம். உங்கள் பிள்ளைகளின் முகம் உலகறிய வேண்டுமா ? ஆடலிலோ பாடலிலோ கற்றுணர்ந்த பிள்ளைகள் தேவை என்று விளம்பரத்தைப் பார்த்தவுடனேயே நாம் விண்ணப்பிக்க ஆரம்பித்து விடுகிறோம். டீவியில் ஒரு முறை நம் பிள்ளைகளின் முகம் தெரிந்தால் போதும் எப்படியாவது பாப்புலர் அகிவிடலாம் என்று நினைப்பில் இன்று பெற்றோர்கள் மிலிட்டரி கேம்ப் ஆட்களாக மாறி பிள்ளைகளை கஷ்டப்படுத்துகிறார்கள். சானல்களின் T.R.B.ரேட்டிங்கினை ஏற்றிக்கொள்வதற்கு, அதன் மூலம் விளம்பரங்களில் அதிகம் சம்பாதிக்கும் நோக்கும் அதிகம் உண்டு என்பது ஒருபுறம் என்றாலும், எத்தனையோ திறமை மிக்கவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர தேவையான சந்தர்ப்பங்கள் அமையாததால் மனதிற்குள்ளேயே பூட்டிவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி அடிபட்டவர்களாய் மாற்றுவதற்குத்தான் இந்தநிகழ்ச்சிகள் அடிகோலுகின்றன.

நான்தான் படிக்கவில்லை என் பிள்ளையாவது படிக்கட்டும் என்ற பேசிய பெற்றோர்கள் இப்போது நான் தான் புகழ் அடையவில்லை என் பிள்ளைகள் புகழ் அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக இந்த மாதிரி மேடைகளைத் தேடி ஓடுகிறார்கள். சென்ற வாரம் ஒரு தாய் தன் மகள் முன்னேற இந்த டீவி நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும் என்று அழுதார் அதையும் முன்னோட்டத்தில் பலமுறை ஒளிபரப்பிக்கொண்டே இருந்தார்கள்.

இதற்காக குழந்தைகள் பெரிதும் வருத்தப்படுகிறார்கள். படிக்கிறதைக் கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் ஒரு நாள் டீவியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போதும் என் பிள்ளை பெரிய ஆளாயிடுவான் என்று எண்ணிக்கொண்டு படிப்போடு, மற்ற கலைகளையும் கற்றுக்கொள் என்று தொல்லை செய்கிறார்கள். அதைவிடக் கொடுமை பிள்ளைகளை இயந்திரமாக்க நினைக்கும் நிலைமை மாற வேண்டும் படிப்பு வகுப்புகள் இவையெல்லாம் சுமையாக இருப்பது போதாது என்று இப்போது பாட்டு, டான்ஸ் என்ற விஷயங்களும் சேர்ந்து கொண்டன. அதிலும் இதில் கலந்துகொண்டு எலிமினேட் ஆகும் பிள்ளைகள் அழுவதும் அதையும் படம் எடுத்து, நான் நல்லா பிராக்டீஸீ செய்தேன் ஆனால்… என்று பேசக்கூட முடியாமல் அவர்கள் படும் வேதனைகளை தன்னால் முடியவில்லையே என்று ஏங்கும் அந்தத் தருணங்களில் நான் எதற்கும் தகுதியில்லை என்ற எண்ணம் அடி மனதில் தங்கி விடுமே என்று எண்ணுவதில்லை.

நார்மலாகவே நம்மில் பலர் வெற்றியை பாராட்டவதை விட தோல்வியை அதிகம் தூண்டிவிடுகிறோம். என்னடா அவ்வளவுதானா ? தோத்துட்டியா ? இதுக்குத்தான் அத்தனை பண்ணியா என்றெல்லாம் கேள்விகளை சந்திக்கும் அந்த பிள்ளைகள் அவமானம் என்ற போர்வையைத் தேவையில்லாமல் சுமக்கிறது. காரணம் நம்மவர்கள் நல்லதைப் பாராட்டியதில்லை, அடுத்தவன் அதுவரையில் போய் வந்துவிட்டானே என்று பொறாமையில் தட்டிக்கொடுக்காமல் கொஞ்சம் முளைத்த திறமையையும் வெட்டிவிடுகிறார்கள். தோல்விதான் வெற்றியின் முதல்படி, எனக்குத் தெரிந்து தோற்றுப்போன பிள்ளைகளின் மனவருத்தத்தை வெளியில் காட்டாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது.

அப்படிப்பட்ட பாடல்களை பயிற்சிக்கு எடுக்கும் போது, அப்பாடலின் இரட்டை அர்த்த வார்த்தைகள் குழந்தைகள் மனதில் பதிகிறது. அர்த்தங்கள் புரியாமலே பிஞ்சுகளின் இதழ்களிலிருந்து பிறக்கின்ற அந்த வார்த்தைகள் மனதில் பதிகின்றதால் எத்தனை இடையூறுகள் ஏற்படுகிறது என்று உணராமல்தான் பெற்றோரும் ஊக்குவிக்கின்றனர். இப்போதைய பாடல் வரிகளில் தொனிக்கும் இரட்டை அர்த்த வரிகள், முக்கல் முனகல்கள் என அனைத்தையும் பிராக்டீஸ் என்ற பெயரில் மனதில் பதியவைக்கிறது பிள்ளைகள். இப்படிப்பட்ட வரிகளில் பெண்களைப் பற்றிய தவறான சொல்லாடல்கள் எழுகின்றன அதை புரியாத பிள்ளைகளின் மத்தியில் தான் இந்த அர்த்தத்தில் தான் பாடுகிறோம் என்றே தெரியாமல் பாடுகின்றனர்.

எப்படியாவது பிள்ளைகளின் மனதைக் கெடுத்தே தீருவேன் என்றுதான் கார்ட்டூன் நிகழ்வுகளிலும் கங்கணம் கட்டிக்கொண்டு வருகின்றன மேலை நாடுகளில் நடக்கும் அங்கு தடை செய்யப்பட்ட சில டிராமாக்கள். நம் சானல்களில் ஒளிபரப்பப் படுகின்றன. என் மகளுடன் நான் இணைந்து ஒருமுறை கார்ட்டூன் பார்த்தேன். அது செட்ரிக் என்று ஒரு ஷோ 8வயது பையன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் ஜென் என்ற பெண்ணை எப்படி கரெக்ட் செய்வது என்பதுதான் அந்த கார்ட்டூனின் கதையே ? இப்படி எல்லா ஷோக்களில் ஒரு முட்டாள் பையன் அவனுடன் இரண்டு பிள்ளைகள் ஒரு அழகான சின்னப்பெண். அந்தப்பையன் அந்தப் பெண்ணைக் கவர எல்லா முயற்சிகளையும் எடுக்கிறதைப் போல் கதையமைப்பு இதில் வயது முதிர்ந்த தாத்தா அவனுக்கு உதவுகிறார். பள்ளிப் பருவத்தில் ஒரு குறிப்பிட்ட வயதுவரை பாலினம் பாராமல் பிள்ளைகள் ஒற்றுமையாய் வாழ்கின்றன. இம்மாதிரியான நிகழ்வுகள் அந்த வயதிலும் ஆண்-பெண் இடையே தோன்றும் நட்புணர்வை சிதைக்கிறது.
புதியதாய் வந்திருக்கும் ஒரு மட்டரக பாடலை நம் சிறுவயது பையனோ பெண்ணோ பாடி தவறான மூவ்மெண்டுகளை போட்டு ஆடினால் நாம் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்துகிறோம். அதை ஒரு பெருமையாய் கருதுகிறோம். சிறுவயதிலிருந்து செய்யும் ஒரு விஷயத்தை திடுமென்று தவறு என்று சொன்னால் அந்த பிள்ளையின் மனம் எப்படி ஒத்துக்கொள்ளும். இப்படி காலையில் இருந்து மாலை வரையில் இம்மாதிரியான காட்சிகளைக் கண்டால் வளரும் பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைப்பதைப் போல்தானே ஆகும்.
இருள் படர்ந்த சாலையில் ஒரு தெருவிளக்கின் அடியில் ஒரு மனிதர் எதையோ தேடிக் கொண்டிருப்பதை கவனித்த ஒரு வழிப்போக்கன் அவரிடம் சென்று அய்யா என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவரோ நான் எனது மோதிரத்தை தொலைத்துவிட்டேன் என்றாராம்.

எங்கே தொலைத்தீர்கள்?

எனது வீட்டினருகில் என்று பதில் சொல்லிவிட்டு மீண்டும் தேடத் தொடங்கினாராம். வழிப்போக்கருக்கு குழப்பம் அங்கே தொலைத்துவிட்டு இங்கே தேடுகிறீர்களே ஏன்?

இங்குதானே வெளிச்சம் இருக்கிறது என்றாராம் தேடியவர். இப்போது தெருவிளக்குகளில் கூட எந்தநேரம் மின்சாரம் இருக்கிறது என்று தெரியாமல் போனாலும், தனக்குள்ளேயே வெளிச்சம் இருப்பதை உணராமல் எங்கோ தொலைத்து விட்டு தேடும் மனிதனைப் போலத்தான் இருக்கிறது, நாம் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறையும். எனவே நம் செயல்பாடுகளை மாற்றினாலே வாழ்க்கை வாசமுள்ளத் தென்றலாய் மாறிடும். தன்னுடைய கடமையை பிறர் மீது ஏற்றி தவறு நடந்த போதிலும் ஏற்க மனமின்றி ஒன்றுமறியா அப்பாவியை பலிகொடுத்த விஷயத்தையோடு அடுத்த வாரம் சந்திப்போம். ரிஸானா என்னும் சிறுமியின் மரணம் …….. காயாத ஈரமாய் வலிகளோடு தொடரும்………

555 total views, 1 views today

Share Button