நான் யார்?

-ரேணுகா

நான் யார்.. இந்தப் பிரசித்தி பெற்ற கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை மிகச் சொற்பமே. இந்தக் கேள்வியும் இதற்கான பதில்களும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அல்லது பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு முறை இந்தக் கேள்வி எனக்குள் எழும்போதும் அப்போதைய வயதுக்கும் அறிவுக்குமான ஒரு பதில் தோன்றி வந்திருக்கிறது. தன்னை அறிவது என்பது பெரும்பாலும் மத, தத்துவ சித்தாந்தங்களுடன் சம்பந்தப்பட்டது. இதன் எந்த சாயலும் இல்லாமல் எனக்குள் நானே நான் யார் என யோசிக்க விரும்புகிறேன்.

நான் யார்? உடலா, உயிரா, மனமா, செயலா, மூச்சுக்காற்றா, நினைவா, அறிவா எது நான்?

உடலும், உயிரும் மட்டும் நான் என்றால் “நான்” எனபது என்தாய் தந்தை தான்.

மூச்சுகாற்று உடல் அவயங்கள் உதவி இல்லாவிட்டால் வெறும் காற்று தான், எனவே இங்கும் “நான்” என்றால் என்தாய் தந்தை தான்.

மூச்சு இதயத்தோடு சம்பந்தப்பட்டது போல, நினைவுகள் மூளையோடு சம்பந்தப்பட்டவை, எனவே நினைவுகளும் “நான்” அல்ல.

செயல்கள் தான் நான் என்றால், நான் செய்யும் செயல்கள் எதுவுமே தனித்தன்மை வாய்ந்தது என்று கூற முடியாது. காலை முதல் இரவு உறக்கம் வரை மற்றவர்கள் செய்வதையே நானும் செய்கிறேன். உதாரணமாக ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான், அந்த செயலே ராஜராஜ சோழன் என்றால் அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அப்போது மற்ற ஆயிரமாயிரம் “நான்”கள் எல்லாம் அடையாளம் அற்றவையா? எனவே என் செயல்கள் “நான்” அல்ல.

அறிவு, நான் படிக்கும் விஷயங்களால் வந்தாலும் அதை விட மரபாக தலைமுறை தலைமுறையாக வருவதே அதிகம். உதாரணமாக பிறந்த குழந்தை தாய் முலை தேடி பால் அருந்துவதும் அறிவுதான். மேலும் எந்த அறிவும் இல்லாவிட்டாலும் இந்த “நான்” மிஞ்சி நிற்கும்.

மனமானது உடல், உயிர், மூச்சு, அறிவு, செயல், நினைவு எதையும் சட்டை செய்யாது. “நான்”, “எனக்கு” என்று மட்டுமே அரற்றும், “தான் தான்” என்று மார்தட்டும். நன்றி கெட்டு பெற்றோரைக் கூட நோகடிக்கும், பின்பு தோற்று காலில் விழுந்து கெஞ்சும். நம் தனித்தன்மையை சாகவிடாது, கடைசி வரை நம்முடனே பயணித்து நம்முடனே மடியும் மனம் தான் “நான்”.

இந்த மனதைத் தவிர என் உடல், உயிர், அறிவு, மூச்சு, செயல், நினைவு, முகம், சாயல், கம்பீரம், படிப்பு, வாழ்க்கை, சிந்தனை என அனைத்தையும் தந்தது எங்கள் ஆருயிர்த் தாய் தந்தை தான்.

என் கால் தூசி கூட எனதில்லை என்று தோன்றுகிறது.

குழந்தைகள் தினத்தில் திருமணம் செய்து கொண்டதால் தானோ என்னவோ தங்கள் முழு வாழ்வையும் எங்கள் மூவருக்கே தத்தம் செய்த அம்மா அப்பாவுக்கு எங்கள் “மனமார்ந்த” இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

appa-amma-1

என வாழ்த்தி மகிழும்,

நானும், என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் என் அக்கா மற்றும் தம்பியும்.

ரேணுகாவின் ட்விட்டர் பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்

473 total views, 1 views today

Share Button