கற்பனைத் தோழி “பாக்கி”

-குழலி

“சோகமாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்
தந்தையிடம் மூச்சுத் திணறலுக்கும்,இருமல்களுக்குமிடையே குறும்பாய்
பதிலளித்துவிட்டு சிரிப்பாள். .அந்தக் காட்சி முதல் அவளை மட்டுமே பார்க்கத்
தொடங்கிவிடுவேன். .ஒரு ராஜாவின் கதையைப்பற்றி அவளுடைய தந்தை
சொல்லிக்கொண்டிருக்க சிறு சிறு முகபாவனைகளுடன் வெகுசிரத்தையாய் அக்கதையைக்
கேட்கும் காட்சியும்,பின்னணி இசையும் அவளருகில் அமர்ந்து நானும் அவளைப்
பார்த்துக்கொண்டிருப்பதாய் ஒரு பிரம்மை உண்டாகும். .

சிறுசிறு குறும்புகளும்,குதூகலமும் நிறைந்திருக்கும் அவளுடைய ஒவ்வொரு
செயலையும்,விழியசைவுகளையும் பார்க்கப் பார்க்க எனையுமறியாமல் அவள்மீது
இனமறியாத ப்ரியம் முளைக்கும். .

கண்டவுடன் காதலெல்லாம் சாத்தியம்தானென என்னை நானே சமாதானப்படுத்திக்
கொண்டது இவள் முதல்ப்பார்வையிலேயே வருண மீது பிரியம் கொள்ளும் காட்சியைப்
பார்த்ததிலிருந்துதான்..அவனைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம்
வெகுசிரத்தையுடன் அலங்கரித்துக் கொண்டு தன்னைத் தானே ரசிக்கும் காட்சிகளில்
தேவதை இவள் என மனதிற்குள் சொல்லிக்கொள்ள வைத்துவிடுவாள். .

ஓவியப் பயிற்சியின்போது வருண் வரைந்த இலைகளைப் பார்த்து மென்சிரிப்புடன்
உனக்கு வரையத் தெரியாதா எனக் கேட்கும் காட்சியில் ஒவ்வொரு நொடியும் அவளுடைய
முகபாவனையை என் விழிகள் விழுங்கத் தவறியதில்லை. .தன் நேசத்திற்குரியவன்
தன்னைத் தவிர்க்கிறானென உணரும் காட்சிகளில் அவளுடைய கோபம் நிறைந்த
விழிகளும்,செயல்களும் ஒவ்வொரு நொடியும் ரசிக்க வைக்கும். .ஏமாற்றமடையும்
காட்சியில் அழுது அரற்றாமல்,சிறு பரிதவிப்புடன் கவலை தோய்ந்த முகமாய்
அவளுடைய தந்தை அமர்ந்திருப்பைப் பார்ப்பாள்..அந்நொடியே அவளை
அள்ளியணைத்துக்கொண்டு அழத் தோன்றும். .

எப்பொழுது பார்த்தாலும் படத்தின் முதல்ப்பாதி வரை அவள்மீதான வாஞ்சை சிரிக்க
வைக்கும். . இரண்டாம்பாதி முழுவதும் கருணையும்,மென்சோகமும் கலந்த
மனநிலையுடன்தான் இவளை உணர முடியும். .முற்றிலும் மாறிப் போயிருப்பாள்.
.குறும்பு நிறைந்திருந்த கண்களில் வெறுமை குடிகொண்டிருக்கும். .அவளுடைய
மனநிலையைப் பிரதிபலிக்க இசையின் துணையுடன் மெதுவாய் நகரும் திரைக்கதை.
.மீண்டும் தன் காதலைச் சந்திக்கும் காட்சியில் அவள் கொண்டிருக்கும்
போலிக்கோபத்தையும்,பிடிவாதத்தையும் பெண்களால் மட்டுமே முழுவதும் உணர
முடியும். .இறுதிக்காட்சியில் ஒற்றை இலையைப் பார்த்து அவள் கண்ணீருடன்
புன்னகைக்கும் காட்சியில் ஒருதுளிக் கண்ணீராவது என் கண்ணிலிருந்தும்
உதிர்ந்து விழும்..ஆனாலும் ஏதோவொன்று நிறைவடையாதது போன்ற உணர்வை மட்டும்
எத்தனை முறை பார்த்தாலும் இப்படம் தந்துவிடும்..

இப்படத்தில் “”பாக்கி””யாய் சோனாக்ஷி தவிர வேறு யார் நடித்திருந்தாலும்
இவ்வளவு நேர்த்தியாய் பொறுந்தியிருக்கமாட்டார்கள் என்பது எனது ஆழமான
நம்பிக்கை.மற்றவர்களிடமிருந்து எத்தனை கருத்துக்களும்,எதிர்ப்புகளும்
எழுந்தாலும் இந்த ஒரு படம்போதும் சோனாஷியை எனக்குப் பிடிக்குமென தைரியமாய்
சொல்லிக் கொள்ள. .

பூங்குழலியைப் போலவே நான் மிகவும் நேசிக்கும் என் கற்பனைத் தோழி இந்த “”பாக்கி”” :-)

குழலியின் ட்விட்டர் பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்

407 total views, 1 views today

Share Button