உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி பகுதி-4

-தேனம்மை லெக்ஷ்மணன்

IMG_2747

ஒரு வழியாக வழி கேட்டு கொதிக்கும் வெய்யில் தலையிலிறங்கி நல்ல தலைவலியுடன் கோயிலைச் சென்று சேர்ந்தேன். அங்கே தோழிகளைப் பார்த்ததும் ஆசுவாசம். அர்ச்சக் நிவாஸ், த்யான் மண்டப் என்று நல்ல பெரிய கோயில். அங்கே கருவறையில் ஜண்டேவாலி மா வின் இரு பக்கமும் சரஸ்வதியும் காளியும் கொலுவிருக்கிறார்கள். நம்மூரு மாதிரி பிசுபிசுப்பெல்லாம் கிடையாது. வெள்ளை சலவைக்கல் கோயில் தண்ணென்றிருந்தது. தேவியின் ஹாரத்தி பாடலோடு பூஜை முடிந்ததும் யாரோ ஒருவர் வேண்டுதலின் படி பூரியும் அதில் கேசரியும் வைத்துக் கொடுத்தார்கள். ஆளுக்கு இரண்டு பூரி அதன் நடுவில் சூஜி . பக்கத்தில் இருந்தவர்களிடம் அது என்ன என்று கேட்டோம். பூடி, சூஜி என்றார்கள். பூரிக்குப் பெயர் பூடி, கேசரிக்குப் பெயர் சூஜி – வெள்ளை ரவையின் இந்திப்பெயர் சூஜி. !

நாம் கிழங்கு வைத்தோ குருமா வைத்தோ சாப்பிடுவோம். அங்கே பூரியை வாங்கிக் கொண்ட பக்தர்கள் பூரியைப் பிய்த்து சூஜியில் தொட்டுச் சாப்பிட்டார்கள். நாமும் அதையே பின்பற்றினோம். ஒரு மாதிரி வித்யாசமாக இருந்தது. பின்பு அங்கே பைப்படியில் கை கழுவிவிட்டு வெளியே வந்தால் அங்கே பாக்குமட்டைத் தொன்னையில் பிரசாதமென்று சொல்லிக் கோயில் சார்பில் கிச்சடி கொடுத்தார்கள். அது என்ன கிச்சடி என்றால் ரவா கிச்சடி அல்ல. அது வேகவைத்துத் துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கோடு பாசிப்பயறுக் குழம்பை கரம்மசாலா போட்டு பச்சரிசிச்சோற்றில் குழைத்தது போல் இருந்தது. சூடாகவும் சுவையாகவும் இருந்தது. தலைவலி எல்லாம் போயே போச்சு.

வீட்டுக்கு வந்தபின் பக்கத்து வீட்டம்மாவிடம் அது பற்றிக் கேட்டால் அதன் பெயர் கிச்சடி என்று வயிறு சரியில்லாவிட்டால் அதை வீட்டில் வைத்துச் சாப்பிடுவார்கள் என்றும் சொன்னார்.

இன்னும் பக்கத்திலிருக்கும் சிவ் மந்திருக்கு சாயங்கால வேளைகளில் போனால் பெரிது பெரிதாக இருக்கும் கலர் பூந்தியும் காசிமிட்டாயும் கொடுப்பார்கள். சில சமயம் அதிர்ஷமிருந்தால் தூத் பேடாவே கிடைக்கும்.

உறவினர்கள் வந்திருந்தபோது டெல்லி சிட்டி டூர் போனோம். அங்கே இந்தியா கேட்டருகில் கடையில் ரோட்டியும் காலிதால் மாக்னியும்( கறுப்பு உளுந்து சப்ஜி) சாப்பிட்டோம். ருசி என்றால் அவ்ளோ ருசி. ஏனெனில் நடந்து நடந்து களைத்துப் போய் பசி எடுத்து இருந்தது. வீட்டில் இருந்து தயிர்சாதமும் இங்கிலீஷ் காய்கறி பிரட்டலும் கொண்டு சென்றிருந்தோம். அத்தோடு அதையும் வாங்கி வெட்டினோம்.

டெல்லியிலிருந்து காசிக்குச் சென்ற போது அங்கே நகர சத்திரத்தில் உணவு இருக்குமோ என்னவோ என்று பக்கமிருந்த ஒரு கடையில் இரவு உணவை வாங்கிச் சென்றோம். இரவு நேரம் என்பதால் கடை மூடும் நேரம் மேலும் கழுவி விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் உணவு இருக்கிறது என்று சொல்லி ஆசுவாசப்படுத்தினார்கள். என்ன வடநாடு பூரா சப்பாத்தியை விட சப்ஜிதான் விலை அதிகம் சுக்கா பிண்டி சப்ஜி ( வெண்டைக்காய் வறுவல்) என்று கேட்டு வாங்கிச் சென்றோம். அழகான குட்டிமண் பானையில் கொடுத்தார்கள், இன்னொரு மண் பானையில் தஹி ( தயிர் ) பசி மயக்கத்தோடு சென்று அனைவரும் சாப்பிட ஆரம்பித்தால் மேலே மட்டும் பிண்டி அதன் கீழே எல்லாம் கரேலா. அப்பிடின்னா என்னன்னு கேக்கிறீங்களா. பாகற்காய் கறிங்க பாகற்காய். ஏதோ வெண்டைக்காய்தான் கசக்குது போல என்று எடுத்து பார்த்தால் நல்ல விதைகளோடு சேர்த்துச் சமைக்கப்பட்ட பாகற்காய்.

தொடரும்….

பகுதி-1-2-3-5

746 total views, 1 views today

Share Button