உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி பகுதி-3

-தேனம்மை லெக்ஷ்மணன்

110115_tandoori-chicken-5

இரவுநேரம் தெருமுனைகளில் தள்ளுவண்டிகளில் ஆம்லெட் போட்டு விற்பார்கள். சாயங்காலங்களிலிலிருந்தே தந்தூரிக் கடைகள் களைகட்ட ஆரம்பித்துவிடும். தந்தூரி ரொட்டி, தந்தூரி சிக்கன் மசாலா என மணம் பரப்பத்துவங்கிவிடும் கரோல்பாக் ஏரியா. கோழிகளை உரித்து மசாலா தடவி உப்புக் கண்டம்போலக் கயிறுகளில் கட்டி ஓவனில், க்ரில்லில் அவை சுற்றிக் கொண்டிருப்பது ரோட்டின் எந்த முக்கில் வந்தாலும் கடையின் கண்ணாடிக் கதவு வழியாகத் தெரியும்.

நம்கீன் பண்டார் என்பது காரசார வகைகள் விற்கும் கடைக்குப் பெயர். இங்கே ஆலு புஜியா, ( உருளைக்கிழங்கு ஓமப்பொடி) மூங்க்தால் ( வறுத்த பாசிப்பயறு ),, இன்னும் ஓமம் சேர்த்த, சீரகம் சேர்த்த பலகாரவகைகள் வாங்கலாம். இது எல்லாமே பிடிப்பது அவரவர் ருசி சம்பந்தப்பட்ட விஷயம்.

மட்டி என்றொரு ஐட்டம் உண்டு. அது மைதாவில் டால்டா போட்டுப் பிசைந்து உருண்டையாக உருட்டி லேசாகத் தட்டி வேகவைத்து எடுத்திருப்பார்கள். அதில் உப்புகூட இருக்காது. ஆனால் டீக்கு பக்கபதார்த்தமாக அதை சாப்பிடுகிறார்கள். நமக்கு டால்டா நாக்கில் உருண்டு கொண்டிருப்பதைப் போலிருக்கும். அதே போல் ப்ளெயின் பராத்தா என்று காலங்கார்த்தாலே ஒரு ஐட்டம். அதாவது சப்பாத்தி மாவை நன்கு பிசைந்து மாவும் எண்ணெயும் மடித்து மடித்துத் தேய்த்து சப்பாத்திக் கல்லில் போட்டு எடுப்பார்கள். அதுவும் டீயுடன் சாப்பிட. அதாவது பரோட்டா ஒரு வாய் கடித்துச் சாப்பிட்டு விட்டு டீயைக் குடிப்பது அவர்கள் வழக்கம்.

சின்னப்பையனின் பள்ளிக்கு அருகிலேயே ஜண்டேவாலன் மந்திர் என்றொரு கோயில் உண்டு. அங்கே தினம் போக முடியாவிட்டாலும் வெள்ளிக் கிழமைகளில் மூன்று தோழிகளும் போவோம். பன்னிரெண்டு மணிக்கு ஹாரத்தி இருக்கும். சுமார் பத்தரைக்கு நடக்க ஆரம்பித்தால் பதினொன்றரைக்குக் கோயிலுக்குப் போகலாம். இல்லாவிட்டால் பஸ்ஸில் 3 ஸ்டாப்தான். பதினோரு மணிக்கு டவுன்பஸ் பிடித்தால் அஜ்மல்கான் ரோடு தாண்டி அடுத்த ஸ்டாப்பில் இறங்கி இடதுபுறம் நடந்தால் கோயில் வந்து விடும். சில சமயம் நவராத்திரி என்றால் கூட்டமான கூட்டமிருக்கும் . அங்கே இரண்டு நவராத்திரிகள் உண்டு. சாரதா நவராத்திரி வஸந்த நவராத்திரி என்று. எனவே க்யூவில் நின்று போனால் கரெக்டாக பன்னிரெண்டு மணியளவில் ஹாரத்திப் பாடலோடு அம்மனைத் தரிசிக்கலாம்.

ஜண்டேவாலன் மந்திர் என்பது வெள்ளைக்காரர் காலத்தில் நம் சுதந்திரக் கொடியேற்றி வணங்கவென்று ஜண்டேவாலி மா என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட கோயில் என்று அங்கே செட்டிலாகி இருந்த இன்னொரு தோழி ( செண்ட்ரல் பாங்கில் பணிபுரிந்துவந்தார் அவர் கணவர். ) சொன்னார். அவரின் இரட்டைப் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகளுடன்தான் படித்து வந்தார்கள்.

முதல் முறை இந்த மாதிரிக் கிளம்பும்போது நேரமாகிவிட்டபடியால் வீட்டில் வேலை எல்லாம் முடித்துக் கிளம்பி டிபன் சாப்பிடாமல் காஃபி மட்டும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன். உச்சி வெய்யில். நல்ல கிறக்கம். லேசாகத் தலி வலிப்பது போலிருந்தது. பேருந்தையும் காணோம். நடக்கத் துவங்கிவிட்டேன். தோழிகள் மூவரும் வெவ்வேறு தெருக்களில் இருந்ததால் அவர்கள் தெருவழியாகச் சென்றால் ஒன்றாகச் செல்வோம். அல்லது தனித்துச் சென்று கோயிலில் சந்தித்துக் கொள்வோம்.

தொடரும்…

பகுதி-1-2-4-5

446 total views, 1 views today

Share Button