உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி பகுதி-2

-தேனம்மை லெக்ஷ்மணன்

mango_kulfi

அப்பிடிக்கா திரும்பி வெளியே வந்தா அங்கே குல்ஃபி விற்றுக் கொண்டிருப்பார்கள். குல்ஃபி என்பது நம்மூரு பால் ஐஸ் சைஸில்தான் இருக்கும். முழுக்க முழுக்க மில்க்மெய்டில் செய்தது போன்ற சுவை. இதிலும் இரண்டு விதம் ஒன்று ப்ளெயின் குல்ஃபி விலை கம்மி அதன் முனையில் சும்மா 4 முந்திரிப்பருப்புத்தான் இருக்கும். இன்னொண்ணு கொஞ்சம் விலை கூட அதில் முழுதும் முந்திரி பாதாம் இருக்கும். சாப்பிட சாப்பிட கூலாய் நெஞ்சாங்கூடு வரை தொட்டுத் தழுவும். அம்புட்டு ருசி. ருசியா இருக்கேன்னு இன்னொன்னு சாப்பிட்டோம்னா அதிகமில்லை, ஒரே நாளில் ரெண்டுகிலோ வெயிட் போட்டுடுவோம்.

அங்கேயிருந்து நகர்ந்து ட்ரைஃப்ரூட்ஸ் நட்ஸ் வாங்கிகிட்டு அகர்வால் ஸ்வீட்ஸ் போனோம்னா அங்கே பேணி ஸ்பெஷல் பாலில் போட்டு சாப்பிடலாம். இன்னும் பலவிதமான நெய் ஸ்வீட்டு வகைகள் இருந்தாலும் வெளியே விற்கும் பலூடா அருமையா இருக்கும். சேமியாவை வேகவைத்துப் பானையில் போட்டு இருப்பார்கள். நாம் பலூடா கேட்டதும் ஐஸ் கதைதான். ஒரு க்ளாஸ் எடுத்து அதில் பானையிலிருக்கும் சேமியாவை ஒரு கைப்பிடி அள்ளிப் போட்டு எல்லா எசன்ஸும் ஊத்தி ஐஸ்க்ரீம் போட்டு அதுமேலே கொஞ்சம் ஐஸ்கட்டி போட்டு மேலே சில பருப்புகளையும் தூவி ஒரு குச்சி போட்டுக் கொடுப்பார்கள். அந்தக் குச்சியால் சேமியாவை எடுத்துத் தின்ன முடிந்தால் அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் லேசாக சாய்த்துக் கைவிட்டுத் தின்ன வேண்டியதுதான்.

ரோடுகளில் தள்ளுவண்டிகளில் மிகப்பெரிய சைஸ் தோசைக்கல்லில் பழங்களை வெட்டி துண்டுகளாக்கி வேகவைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மாதிரி டால்டாவும் இனிப்பும் கலந்த வாசனை. சிலருக்குப் பிடிக்கும் நமக்கு ஒரு அசட்டுத் தித்திப்பை டால்டா குமட்டலோடு சாப்பிடுவது போல இருக்கும். வெந்த பழம் ஒரு மாதிரி கொழ கொழவென்று ஞானப் பழம்போல சாப்பிடக் கஷ்டம். அதுக்கு சும்மாவே பழமாகச் சாப்பிடலாம்.

குளிர்காலங்களில் ரோடுகளில் ஆம்லெட்டும், பச்சை முள்ளங்கியும், சாத்துக்குடிச்சாறும், சுட்ட சோளக்கருதும் தந்தூரியில் சுட்ட கோழியும் தந்தூரி ரொட்டியும் கிடைக்கும்.

பகல் நேரங்களில் பச்சை முள்ளங்கி வண்டி வரும். அதில் இலையோடு கூடிய முள்ளங்கியை எடுத்துத் தோல்சீவி அதை நான்காகக் கீறி உள்ளே காலா நமக்கும் எலுமிச்சையும் கலந்து கொடுப்பார்கள். ஒரு மாதிரி உறைப்பாக இருக்கும். ஆனால் இதை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வராது என பச்சை முள்ளங்கியை அங்கே இருக்கும் அனைவரும் சாப்பிடுவார்கள். நல்லதுதானே என்று உறைப்பைப் பொறுத்துக் கொண்டு ஓரிரு முறை சாப்பிட்டதுண்டு. ஆனால் இங்கே ரொட்டிக்கே பச்சை வெங்காயம் பச்சை முள்ளங்கியை சைட் டிஷ்ஷாக சாப்பிடுகிறார்கள்.

தள்ளுவண்டிகளில் சின்ன சைஸ் சாத்துக்குடி 4 ஐ எடுத்துப் பிழிந்து ராக் சால்ட், ஜல்ஜீரா போட்டுக் கொடுப்பார்கள். இதெலாம் தாக சாந்தி. குடித்தால் கொஞ்சம் வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பலாம். சாயங்காலங்களில் சோளக்கருது வண்டி வரும். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் சோளத்தை உரித்துத் தணலில் சுட்டு கறுப்பு உப்பும் எலுமிச்சையும் உரசிக் கொடுப்பாங்க. சோளக்கருது படபடவென்று தணலில் வெடிக்கும் அழகே அழகு. அசைவம் பிடித்த வெளிநாட்டுக்காரர்கள் அதை தேர்ந்தெடுத்துக் கொடுத்து சுட்டுத்தரச்சொல்லிச் சாப்பிடுவதைப் போன்றது இது. என்ன லேசா பல் எல்லாம் கறுப்பு கறுப்பாக திப்பியாக ஒட்டிக் கொள்ளும். ஒரு தரம் பல்லு தேச்சுக்கவேண்டியதுதான்.

தொடரும்…

பகுதி-1-3-4-5

895 total views, 1 views today

Share Button