உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி பகுதி-1

-தேனம்மைலெக்ஷ்மணன்

Dwv62E1tzXDkj5

தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம்.

தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு கலந்தது போல் ஒரு ருசி. நாக்கின் சுவைமொட்டுக்கள் சொட்டாங்கி போட்டு குடிக்கலாம். தாகமும் அடங்கும்.

அதே மதியத்தில் ஐஸ்வண்டி வரும். அதில் விதம் விதமான சிரப்புகள் இருக்கும். நாம் ஐஸ் கேட்டால் நன்கு சீய்த்த வழுவழுவென்ற மரக்குச்சிகளை எடுத்து ஒரு டம்ளரின் நடுவில் வைப்பார். ஐஸ்பாக்ஸ் உள்ளேயிருந்து ஒரு ஐஸ் பாரை எடுத்து காய் சீவுவது போன்ற ஒரு சீவியில் சீய்த்து அந்தக் குச்சி வைத்த டம்ளரில் போடுவார். ஐஸ்காரர். அதில் திராக்ஷை, மாங்கோ, பைனாப்பிள் இன்னபிற கலர் சேர்த்த எசன்சுகளை லேயர் லேயராக ஊற்றி உருட்டிச் சேர்த்துக் கொடுப்பார். மேல்வீட்டு, கீழ்வீட்டு எங்கவீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து டம்ளர் சைஸ் குச்சி ஐஸ் தின்றது விநோதமான அனுபவம்.

அங்கே இருந்த க்ரீனரி பப்ளிக் ஸ்கூலில் எங்கள் சின்னப் பையன் படித்துக் கொண்டிருந்தான். அரைநாள்தான் பள்ளிக்கூடம். அவனைப் பள்ளியில் காலை கணவர் விட்டுவிட்டுச் சென்றுவிடுவார். மதியம் அழைக்க நாங்கள் செல்வோம்.

நாங்கள் என்றால் மூன்று தோழிகள் நான், மல்லிகாம்மா, மீனாம்மா ஆகியோர் செல்வோம். டி பி குப்தா ரோட்டில் இருக்கும் அந்தப் பள்ளியின் அருகேதான் அஜ்மல்கான் ரோடு. ஷாப்பிங்க் ஏரியா. அங்கே விர்மானி பாத்திரக்கடைக்கு அருகில் ட்ரைஃபுரூட்ஸ் & நட்ஸ் கடைகளும் பானி பூரி கடைகளும் இருக்கும்.

மாலை நேரத்தில் இந்த பானி பூரி கடைகளில் உடைத்த பூரியில் வெறும் பானியை வாங்கி லபக் லபக்கென்று விழுங்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால் நமக்கு அந்தப் பானி பிடிப்பதில்லை. ஆனால் அது கொண்டைக்கடலை வேகவைத்த சத்துநீர். கறுப்பு நிறத்தில் ஏதோ அழுக்குத்தண்ணீர் போல பார்க்கவே சந்தேகத்துக்கிடமாக இருக்கும் அதை கோட் டை அணிந்த பலரும் விரும்பி ருசிப்பார்கள்.

அங்கே கஃபார் மார்க்கெட்டில் விற்கும் சோளா பட்டூரா செம ருசியாக இருக்கும். ஷாப்பிங் செய்துவிட்டு சாப்பிடப்போனால் இந்தக்கடை ஒரு முட்டுச் சந்தில்தான் இருக்கிறது. அந்தத் தெரு முழுக்க சாயக் கடைகள் உல்லனிலிருந்து பட்டுவரைக்கும் சாயம் தோய்த்துக் கொடுப்பார்கள். கடை வாசலிலேயே சாயத்தைத் தோய்த்து குச்சியால் பிடித்தபடி மடித்து மடித்து பார்டர் நனையாமல் சாயம் தோய்த்துப் பிழிவார்கள்.

அப்பிடிக்கா போய் ஒரு புடவையையோ ஷாலையோ சாயம் போடக் கொடுத்துவிட்டு இந்த சோளா பட்டுரா கடைக்குப் போனால் ஒரே கூட்டமாக இருக்கும்.

மைதாவில் தயிர் ஈஸ்ட் போட்டுப் பிசைந்து மூடி வெய்யிலில் லேசாகப் புளிக்கவைத்த மாவைக் கையாலேயே உருட்டி பூரி போலத் தட்டிக் காயும் எண்ணெயில் போட்டுப் புஸ்ஸென்று பொரித்துத் தருகிறார்கள். அதுக்காக நம்மூரி பூரி மாதிரி இது உப்பாது. பேருதான் பட்டூரா ஆனா கனமான வெள்ளை சப்பாத்திபோல அங்கங்கே உப்பி மெத்தென்று இருக்கும். லேசா ரப்பர் மாதிரியும் இருக்கும். இங்கே சீசன் சமயங்களில் பச்சைக் கொண்டைக்கடலை மசாலா இருக்கும். சீரகம் இஞ்சி வெங்காயம் தக்காளி ஆம்சூர், கரம்மசாலா சேர்த்தது. இங்கே அதிகம் பூண்டு சேர்ப்பதில்லை. இதுதான் உண்மையான சோளா மசாலா. இத்தோடு மாங்காய் ஊறுகாய், வெள்ளரி தக்காளி வெங்காயத்துண்டுகளைப் பெரிதாக வெட்டித் தருகிறார்கள். ஒருவருக்கு ஒரு செட் பட்டூரா போதும். ருசியாகத்தான் இருக்கும் என்றாலும் அதுக்கு மேல அந்த ரப்பரைச் சாப்பிட முடியாது. பல்லும் வலிக்கும்.

தொடரும்

பகுதி-2-3-4-5

646 total views, 1 views today

Share Button